கர்நாடகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பேரிடர் நிவாரண நிதியில் ரூ.84 கோடி ஒதுக்கீடு மந்திரி ஆர்.அசோக் அறிவிப்பு


கர்நாடகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த  பேரிடர் நிவாரண நிதியில் ரூ.84 கோடி ஒதுக்கீடு  மந்திரி ஆர்.அசோக் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 March 2020 2:57 AM IST (Updated: 17 March 2020 2:57 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பேரிடர் நிவாரண நிதியில் ரூ.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கர்நாடக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் தெரிவித்தார்.

பெங்களூரு, 

சீனாவில் உயிர்பலி வாங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை சுமார் 6 ஆயிரம் பேரை இந்தநோய் காவு வாங்கியுள்ளது. மேலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவை பொறுத்தவரை 110-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 2 பேர் கொரேனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதில் கர்நாடகத்தை சேர்ந்த ஒரு முதியவர் அடங்குவார். கர்நாடகத்தில் மட்டும் தற்போது 7 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. அவர்களுக்கு மருத்துவமனைகளில் தனி வார்டுகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கர்நாடக அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது மழலையர் பள்ளி முதல் 5-ம் வகுப்பு வரை காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளை கர்நாடக அரசு விதித்துள்ளது.

3-வது நாளாக முடங்கியது

அதாவது திருமண நிகழ்ச்சிகள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், கட்சி கூட்டங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஒரு வாரத்திற்கு நடத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிகவளாகங்கள், தியேட்டர்கள், பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள், இரவுநேர விடுதிகளை மூடப்பட்டு உள்ளன.

கொரோனா வைரஸ் பீதியால் கர்நாடகம் முழுவதும் ரெயில், பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்துள்ளது. மேலும் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்படுகிறது. அத்துடன் முக்கிய சாலைகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடக்கின்றன. இதனால் 3-வது நாளாக மாநிலம் முழுவதும் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள், பூங்காக்கள் மூடப்பட்டு உள்ளன. மேலும் மார்க்கெட்டுகளிலும் மக்கள் கூட்டம் குறைந்தது. ரெயில், பஸ் நிலையங்களிலும் குறைந்த அளவில் பயணிகள் தென்பட்டனர். ஒட்டுமொத்தமாக 3-வது நாளாக நேற்றும் கர்நாடக மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கி போய் உள்ளனர். இதன் காரணமாக பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

ரூ.84 கோடி நிதி ஒதுக்கீடு

இந்த நிலையில் கர்நாடகத்தில் கொரோனா வைரசை தடுக்க கர்நாடக அரசு ரூ.84 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து உள்ளதாக கர்நாடக வருவாய்த் துறை மந்திரி ஆர்.அசோக் நேற்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் பெங்களூரு விதான சவுதாவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பேரிடர் நிவாரண நிதியில்...

கர்நாடகத்தில் சுகாதார நெருக்கடி நிலையை கவனத்தில் வைத்துக் கொண்டு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் 25 சதவீதத்தை கொரோனா வைரசை கட்டுப்படுத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த மாநில இயற்கை பேரிடர் நிதிக்கு மத்திய அரசு ரூ.334 கோடியை ஒதுக்கியுள்ளது. இதில் கொேரானா வைரசை கட்டுப்படுத்த ரூ.84 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 10 சதவீதம் மருத்துவ உபகரணங்கள் வாங்க வேண்டும். மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தாசில்தார்கள் இந்த நிதியை பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்.

கடும் நடவடிக்கை

இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா, சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு ஆகியோரின் ஆலோசனை கூட்டம் நடைபெறும். அதில் இந்த நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். கர்நாடகத்தில் கொரோனா வைரசை தடுக்க நிதி பற்றாக்குறை இல்லை. அடுத்த ஒரு மாதத்தில் மத்திய அரசு மேலும் நிதியை ஒதுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

கொரோனாவை தடுக்கும் நோக்கத்தில் அவசர தேவைக்காக பயன்படுத்தும் சானிடைசர், முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி திரவங்களை அதிக விலைக்கு விற்றால் அத்தகைய கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை கைது செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்படும்.

மருந்துகடைகளில் சோதனை

நான் சமீபத்தில் யுகாதி பண்டிகைக்கு புத்தாடைகள் வாங்க கடைக்கு சென்றிருந்தேன். அங்கு சானிடைசர் வைக்கப்பட்டிருந்தது. அதன் விலை ரூ.400 ஆகும். இது தங்களுக்கு நிதி சுமையை ஏற்படுத்துவதாக கடை உரிமையாளர் என்னிடம் கூறினார். இதுகுறித்து மருந்து கடைகளில் சோதனை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

சட்டசபை கூட்டத்தை ரத்து செய்வது குறித்து அரசு ஆலோசிக்கவில்லை. இந்த கூட்டத்தை ரத்து செய்தால், மக்கள் மேலும் பீதி அடைவார்கள். ஆயினும் சபாநாயகருடன் கலந்து ஆலோசனை நடத்துவேன்.

இவ்வாறு மந்திரி ஆர்.அசோக் கூறினார்.

Next Story