உருக்குலைந்த சாலையால் தொடரும் விபத்துகள்: நெல்லை-திருச்செந்தூர் நாற்கரசாலை பணிகள் விரைவில் தொடங்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


உருக்குலைந்த சாலையால் தொடரும் விபத்துகள்: நெல்லை-திருச்செந்தூர் நாற்கரசாலை பணிகள் விரைவில் தொடங்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 16 March 2020 10:47 PM GMT (Updated: 16 March 2020 10:47 PM GMT)

நெல்லை-திருச்செந்தூர் இடையே உருக்குலைந்த சாலையால் தொடர் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, அங்கு நாற்கரசாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

திருச்செந்தூர்,

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு விடுமுறை நாட்களிலும், விழாக்காலங்களிலும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் இங்கு வரும் பக்தர்கள், பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கும், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நவ திருப்பதி கோவில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்ய தவறுவது இல்லை.

இந்த நிலையில் நெல்லை-திருச்செந்தூர் மெயின் ரோடு பழுதடைந்து குண்டும்-குழியுமாக உள்ளது. சாலை முழுவதும் ஆங்காங்கே ராட்சத பள்ளங்கள் உள்ளன. இதனால் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

நெல்லையில் இருந்து தூத்துக்குடி மாவட்ட எல்லையான செய்துங்கநல்லூர் வரையிலும் சாலை நல்ல முறையில் உள்ளது. பின்னர் செய்துங்கநல்லூர் பஜார் முழுவதும் சாலை குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால் நெல்லையில் இருந்து இரவில் திருச்செந்தூருக்கு வேகமாக செல்லும் வாகனங்கள், செய்துங்கநல்லூர் பஜாரில் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன.

செய்துங்கநல்லூரில் இருந்து தூதுகுழி, கருங்குளம், ஆதிச்சநல்லூர், பொன்னங்குறிச்சி, ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி, ஆழ்வார்திருநகரி, பால்குளம், கேம்பலாபாத், தென்திருப்பேரை, குரும்பூர் வழியாக திருச்செந்தூர் வரையிலும் சாலையின் நடுவில் ஆங்காங்கே பெரிய பள்ளங்களாக காட்சி அளிக்கிறது. பொன்னங்குறிச்சியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி வரையிலும் சாலை முழுவதும் உருக்குலைந்து பல்லாங்குழி சாலையாக காணப்படுகிறது. ஆழ்வார்திருநகரியில் இருந்து பால்குளம், கேம்பலாபாத் வழியாக தென்திருப்பேரை வரையிலும் சாலை முழுவதும் கற்கள் பெயர்ந்து மண்சாலையாக மாறி விட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

நெல்லை, திருச்செந்தூரில் உள்ள கல்வி நிலையங்களுக்கு தினமும் காலையில் ஏராளமான மாணவ-மாணவிகள் வாகனங்களில் சென்று விட்டு, மாலையில் வீடு திரும்புகின்றனர். மேலும், அங்குள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தினமும் பல்வேறு தேவைகளுக்காக இந்த பழுதடைந்த சாலை வழியாகவே சென்று வருகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அறுவடை செய்யப்படும் வாழைத்தார்களை ஏற்றி செல்லும் லாரிகளும், தென்திருப்பேரை, குரும்பூர் பகுதிகளில் அறுவடை முடிந்து நெல் மூட்டைகளை ஏற்றி செல்லும் லாரிகளும் இந்த பழுதடைந்த சாலையை கடந்து செல்ல பெரிதும் சிரமப்படுகின்றன. இதனால் வாகனங்கள் சேதமடைவதுடன் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி நிகழும் தொடர் விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டு ஆறாத சோகத்தை ஏற்படுத்துகிறது. அந்த வழியாக அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வேன், தீயணைப்பு வாகனம் போன்றவையும் வேகமாக செல்ல முடியாததால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

இதற்கிடையே, திருச்செந்தூர்-நெல்லை சாலையை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதேபோன்று நெல்லை-செங்கோட்டை ரோடு, செங்கோட்டை-கொல்லம் ரோடு ஆகியவற்றையும் விரிவாக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக திருச்செந்தூரில் இருந்து பாளையங்கோட்டை, செங்கோட்டை, புனலூர் வழியாக கொல்லம் வரையிலும் நேர்கோடாக அமையும் வகையில், சுமார் ரூ.1,000 கோடி செலவில் நாற்கரசாலை அமைக்க பரிந்துரைக்கப்பட்டது. இதுதொடர்பாக பாளையங்கோட்டை, குரும்பூர் ஆகிய இடங்களில் கடந்த ஆண்டு பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து முதல்கட்டமாக திருச்செந்தூர்-நெல்லை இடையே நாற்கரசாலை அமைப்பதற்காக, சாலை விரிவாக்கம் செய்ய நில அளவீடு செய்யப்பட்டது. அந்த இடத்தில் உள்ள மரங்கள், கட்டிடங்களில் குறியீடு செய்யப்பட்டு, அவற்றை கையகப்படுத்தும் பணி தொடங்கியது.

ஆழ்வார்திருநகரி நகருக்குள் சாலை வளைந்து நெளிந்து செல்வதுடன் அங்கு ஏராளமான வீடுகள், கடைகள், மண்டபங்கள் உள்ளன. இதேபோன்று ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதி தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அங்குள்ள குறுகிய பாலம் மற்றும் சாலையை அகலப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதையடுத்து மாற்றுப்பாதை வழியாக நாற்கர சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆழ்வார்திருநகரி தாமிரபரணி ஆற்றுப்பாலம் வழியாக ஆழ்வார்தோப்பு, ஸ்ரீவைகுண்டம், தோழப்பன்பண்ணை, கொங்கராயகுறிச்சி வழியாக கருங்குளம் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் சென்று இணையும் வகையில், நாற்கரசாலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், நெல்லை-திருச்செந்தூர் நாற்கர சாலைக்கு நில அளவீடு செய்து குறியீடு செய்யப்பட்டு, ஒரு ஆண்டுக்கு மேலாகியும் பணிகள் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. எனவே, இதற்கான நிலங்களை கையகப்படுத்தி, நாற்கரசாலை அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும், நாற்கரசாலை அமைக்கும் பணி தாமதம் ஆகுமானால், தற்போது பழுதடைந்துள்ள சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையில், நெல்லை-திருச்செந்தூர் சாலை பல்வேறு இடங்களில் குண்டும்-குழியுமாக மாறி விட்டது. பின்னர் அதில் சில இடங்களில் மட்டும் கற்களையும், மண்ணையும் போட்டு தற்காலிகமாக சீரமைத்தனர். சில இடங்களில் தார் சாலையே மறைந்து, மண் சாலையாக மாறி விட்டது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதுடன், காற்றில் அதிகளவில் புழுதி பறப்பதால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. எனவே, நாற்கர சாலை அமைக்கும் பணியை தொடங்குவதற்கு முன்பாக, பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story