கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்தி: ஒரு முட்டைக்கு ரூ.2 நஷ்டம் ஏற்படுவதால் உற்பத்தி குறைப்பு


கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்தி: ஒரு முட்டைக்கு ரூ.2 நஷ்டம் ஏற்படுவதால் உற்பத்தி குறைப்பு
x
தினத்தந்தி 17 March 2020 11:30 PM GMT (Updated: 17 March 2020 7:28 PM GMT)

கொரோனா வைரஸ் வதந்தியால் ஒரு முட்டைக்கு ரூ.2 நஷ்டம் ஏற்படுவதாகவும், எனவே முட்டை உற்பத்தியை குறைக்க முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் இருந்து தினந்தோறும் 3½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொடர்பான வதந்தியால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை மற்றும் கோழி விற்பனை கடும் சரிவை சந்தித்து உள்ளது. இதனால் சுமார் 15 கோடி முட்டைகள் இதுவரை தேக்கம் அடைந்து உள்ளது. எனவே கோழிப்பண்ணையாளர்களுக்கு தினசரி கோடிக்கணக்கான ரூபாய் ந‌‌ஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி சார்பில் கோழிப்பண்ணையாளர்களுக்கான அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

மைசூருவில் பறவை காய்ச்சல்

கூட்டத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கேரளாவை தொடர்ந்து மைசூருவிலும் பறவை காய்ச்சல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே இங்கிருந்து தினசரி கர்நாடகா மாநிலத்திற்கு அனுப்பப்படும் 40 லட்சம் முட்டைகளை நிறுத்த ஆலோசித்து வருகின்றனர். அவ்வாறு நிறுத்தினால் அந்த முட்டைகளையும் இங்கேயே விற்பனை செய்ய வேண்டிய நெருக்கடி நிலை ஏற்படும்.

ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பதால் முட்டை விற்பனை குறைந்து உள்ளது. இந்த விடுமுறை 31-ந் தேதிக்கு மேலும் நீடிக்க வாய்ப்பு உள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலையில் எங்களுக்கு திருப்தி இல்லை. ஏனெனில் நாங்கள் நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து பண்ணையாளர்கள் குறைத்து விற்பனை செய்கிறார்கள். எனவே ஒரே விலையாக 2 ரூபாய் என அறிவிக்கலாமா? என யோசித்து வருகிறோம்.

முட்டைக்கு ரூ.2 ந‌‌ஷ்டம்

முதல்-அமைச்சரை சந்தித்து அரசின் மூலமாக முட்டை, கோழிகளை சாப்பிடலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதேபோல் மத்திய அரசை அணுகி தானியங்களை மானிய விலையில் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது உள்ள சூழ்நிலையில் முட்டை உற்பத்தி செய்தால் ஒரு முட்டைக்கு ரூ.2 வீதம் ந‌‌ஷ்டம் ஏற்பட்டு வருகிறது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.. எனவே குறைவான அளவு தீவனம் கொடுத்து கோழிகளை மட்டும் உயிருடன் வைத்து கொண்டால் போதும். முட்டை உற்பத்தியை குறைப்பதன் மூலம் அதன் விலை உயர வாய்ப்பு ஏற்படும். இந்த பிரச்சினையில் இருந்து மீண்டு வருவதற்கு இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகும் என நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல துணைத்தலைவர் சிங்கராஜ், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சுந்தர்ராஜன் மற்றும் முட்டை வியாபாரிகள் சங்கத்தினர், தீவன உற்பத்தியாளர்கள், கோழிப்பண்ணையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story