கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் குணமடைய ராமேசுவரம் அக்னிதீர்த்த கடற்கரையில் சிறப்பு யாகம்; பக்தர்கள் வருகை குறைவால் வெறிச்சோடிய கோவில்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் குணமடைய வேண்டி ராமேசுவரம் அக்னிதீர்த்த கடற்கரையில் சிறப்பு யாக பூஜை நடந்தது. பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.
ராமேசுவரம்,
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக நாடுகளில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் கொரோனா பரவாமல் தடுக்க மத்திய,மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்தநிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் பூரண குணமடைய வேண்டியும், உலக நன்மைக்காவும், நாட்டு மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டியும் ராமேசுவரம் அக்னிதீர்த்த கடற்கரையில் நேற்று புரோகிதர் சங்கம் சார்பில் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.
காலை 7 மணிக்கு கணபதிஹோமத்துடன் தொடங்கியது. யாகசாலை மண்டபம் முன்பு 2 கலங்களில் புனித நீர் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இந்த சிறப்பு யாகபூஜையில் அக்னிதீர்த்த கடற்கரை புரோகிதர் சங்க தலைவர் ராமசுப்பிரமணியன்,செயலாளர் சுந்தரேசன்,பொருளாளர் ரமணி, யாத்திரை பணியாளர்கள் சங்க தலைவர் பாஸ்கரன், பிராமணர் சங்க நிர்வாகிகள் ஆனந்த பத்மநாத சர்மா, சுந்தரம் வாத்தியார், நாராயணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் கொரோனா பீதியால் ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வருகை மிகவும் குறைந்தது. இதனால் கோவிலின் சாமி, அம்பாள் சன்னதி, தீர்த்த கிணறுகள், 3-ம்பிரகாரம் மற்றும் கோவிலின் 4 ரத வீதிகளின் சாலைகளும் பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அது போல் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரை, கம்பிப்பாடு பகுதி, பாம்பன் ரோடு பாலம் உள்ளிட்ட இடங்களும் தொடர்ந்து வெறிச்சோடியே காணப்பட்டு வருகின்றன.
மேலும் கொரோனா பீதியால் ராமேசுவரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீடு, அருங்காட்சியகம் மற்றும் பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாம் மணிமண்டபம் நேற்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு மூடப்பட்டது. வருகிற 31-ந் தேதி வரையிலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story