குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் போராட்டம்
x
தினத்தந்தி 19 March 2020 12:00 AM GMT (Updated: 18 March 2020 10:38 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள்.

கள்ளக்குறிச்சி,

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு அறிவித்து இருந்தது.

அதன்படி சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவதற்காக தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை சோந்தவர்கள் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நேற்று காலையில் பெருந்திரளாக திரண்டு வந்தனர். இதில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், திருக்கோவிலூர், தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச்சேர்ந்த முஸ்லிம்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கைது செய்யவில்லை

பின்னர் அவர்கள் குடியுரிமை திருத்த சட்டம் உள்பட 3 சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி கோ‌‌ஷங்கள் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மாவட்ட தலைவர் சாலிக் பா‌ஷா தலைமை தாங்கினார். மாநில பேச்சாளர் அபுபக்கர் சஹாதி சிறப்புரையாற்றினார். இப்போராட்டத்தையொட்டி கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினரை போலீசார் கைது செய்யவில்லை. இதனால் அவர்கள் ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கலைந்து சென்றனர்.

Next Story