காரமடை அருகே பெள்ளாதி கூட்டுறவு சங்கத்தில் ரூ.4 கோடியே 80 லட்சம் மோசடி முன்னாள் தலைவர், செயலாளர் கைது


காரமடை அருகே பெள்ளாதி கூட்டுறவு சங்கத்தில் ரூ.4 கோடியே 80 லட்சம் மோசடி முன்னாள் தலைவர், செயலாளர் கைது
x
தினத்தந்தி 22 March 2020 5:30 AM IST (Updated: 22 March 2020 12:35 AM IST)
t-max-icont-min-icon

காரமடை அருகே உள்ள பெள்ளாதி கூட்டுறவு சங்கத்தில் ரூ.4 கோடியே 80 லட்சம் மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் தலைவர், செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை,

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெள்ளாதியில், பெள்ளாதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இதன் தலைவராக முருகையன்(வயது 69), செயலாளராக மனோகரன்(48) ஆகியோர் முன்பு பதவி வகித்தனர். இந்த சங்கத்தில் ஏராளமான விவசாயிகளை உறுப்பினர்களாக சேர்த்து முதலீடு திரட்டப்பட்டது. மேலும் தங்கநகை கடன் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டுவரை சங்கத் தின் வரவு, செலவு கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. இதில், ரூ.4 கோடியே 80 லட்சம் மோசடி நடந்தது கண்டறியப்பட்டது.

விசாரணை

போலி ரசீதுகள் மற்றும் பொய்யான கணக்குகள் காட்டி முன்னாள் தலைவர், செய லாளர் ஆகியோர் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டுறவு சங்க மாவட்ட பதிவாளர் பிராங்கிளின் ஜோசப் கோவை வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து கூட்டுறவு சங்கத்தில் பெண் குமாஸ்தாவாக பணியாற்றிய சுமதி என்பவரிடம் இந்த மோசடி தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் கடந்த 2018-ம் ஆண்டு சுமதி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவருடைய கணவர் அளித்த புகாரின்பேரில் காரமடை போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முன்னாள் தலைவர்- செயலாளர் கைது

இந்தநிலையில் பொள்ளாதி கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பாக மோசடி, கூட்டுச்சதி, போலி ஆவணங்களை பயன்படுத்துதல் உள்பட பல்வேறு சட்டப்பிரிவுகளில் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் முருகையன், செயலாளர் மனோகரன் ஆகிய 2 பேரை வணிககுற்றப் புலனாய்வு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பிரேம்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

கைதான 2 பேரையும் போலீசார் கோவை 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story