கூலிப்படையை ஏவி போலி டாக்டரை கொன்றது அம்பலம் அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேர் கைது


கூலிப்படையை ஏவி போலி டாக்டரை கொன்றது அம்பலம் அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 March 2020 12:00 AM GMT (Updated: 21 March 2020 8:09 PM GMT)

திருமங்கலம் அருகே போலி டாக்டர் கொலை வழக்கில் அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.கடனை திருப்பி செலுத்தாததால் ஏற்பட்ட தகராறில் கூலிப்படையை ஏவி அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

திருமங்கலம்,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தில் வசித்து வந்த போலி டாக்டரான பால்ராஜ்(வயது70). கடந்த 5-ந் தேதி வீட்டில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் உத்தரவின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மதுரை பொன்மேனி பகுதியைச் சேர்ந்த விஜயராஜன்(38) என்பவர் மதுரை கோர்ட்டில் சரண்அடைந்தார்.

கூலிப்படை

அவர் தெரிவித்த தகவலின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. போலி டாக்டரான பால்ராஜ் வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். அவரிடம் ஆலம்பட்டியை சேர்ந்த அரசு பஸ் டிரைவரான முத்துக்குமார் என்பவர் ரூ.19 லட்சம் வரை கடன் வாங்கி இருந்தாராம். அதனை திருப்பி கொடுப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் முத்துக்குமார் கூலிப்படையை ஏவி பால்ராஜை கொலை செய்ததாக விஜயராஜன் தெரிவித்துள்ளார்.

2 பேர் கைது

இதனையடுத்து அரசு பஸ் டிரைவர் முத்துக்குமார் மற்றும் கூலிப்படையை சேர்ந்த திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த சரவணகுமார் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இதில் தொடர்புடைய விஜயராஜன் ஏற்கனவே சரணடைந்து விட்ட நிலையில் திருமங்கலம் ஆனையூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ஒருவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.


Next Story