காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு ஆலோசனை கூட்டம்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 22 March 2020 5:00 AM IST (Updated: 22 March 2020 3:33 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தினருடன் மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆலோசனை நடத்தினார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து காஞ்சீபுரம் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தினருடன் ஆலோசனை கூட்டத்தை மாவட்ட கலெக்டர் பொன்னையா நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, போலீஸ் துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் (தமிழ்நாடு கிளை), தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்்கள் அனைவரும் அரசுடன் ஒருங்கிணைந்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், உணவகங்கள், முக்கிய வீதிகள் மற்றும் கடைவீதிகள் போன்ற இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

விழிப்புணர்வை ஏற்படுத்திட

மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் குழுக்களாக கூடுவதையும், வெளியில் செல்வதையும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் தங்களது கைகளை சுத்தமாக கழுவி மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலமாகவும், திரளான மக்கள் கூடுவதை தவிர்ப்பதன் மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இயலும்.

எனவே தமிழக அரசின் சீரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுவோர்கள் பொதுமக்களுக்கு தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, சப்-கலெக்டர் சரவணன், மற்றும் அரசு அலுவலர்கள், இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தினர், தன்னார்வ தொண்டு நிறுவனர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story