விழிப்புணர்வு ஏற்படுத்தி ‘கொரோனா போரை எதிர்கொள்ள தயாராவோம்’ - ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கலெக்டர் கடிதம்


விழிப்புணர்வு ஏற்படுத்தி ‘கொரோனா போரை எதிர்கொள்ள தயாராவோம்’ - ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கலெக்டர் கடிதம்
x
தினத்தந்தி 22 March 2020 10:45 PM GMT (Updated: 22 March 2020 10:45 PM GMT)

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கொரோனா போரை எதிர்கொள்ள தயாராவோம் என்று ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதி உள்ளார்.

மதுரை,

கலெக்டர் வினய், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் செயலர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இன்றைய சூழலில் நாம் ஒரு பேரிடரை எதிர்கொண்டுள்ளோம். இந்த ஆபத்தான சொல்லிலிருந்து நம்மையும், நம் மக்களையும் பாதிப்பின்றி தற்காத்திட வேண்டுமென மத்திய, மாநில அரசுகள் பெருமுயற்சிகள் எடுத்து வருகின்றன. மாவட்ட நிர்வாகம் முடுக்கி விடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் அனைத்து பணிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு 24 மணி நேரமும் இதற்காக அக்கறைசெலுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி நீங்களும் கடந்த 4 நாட்களாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றீர்கள். அதற்காக மாவட்ட நிர்வாகம் உங்கள் அனைவருக்கும் நன்றி செலுத்துகிறது. ஆனால் நமது உழைப்பு கானலுக்கு இறைத்த நீராக உள்ளது. ஏனெனில் மக்கள் இதைப்பற்றி சிந்திக்கவில்லை. அவர்களிடம் எவ்வித அச்ச உணர்வும் தெரியவில்லை. ஒதுங்கி இருக்க வேண்டும் என்றோ, கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்றோ உணரவில்லை.

தற்போது உருவாகியுள்ள கொேரானா பேரிடர் அப்படியல்ல. இந்த உலகத்தில் உயிருடன் வாழவிரும்பும் ஒவ்வொருவரும் இந்த பாதிப்பின் தன்மையை உணர்ந்து செயல்படவேண்டும். பயணம் தவிர்த்தல், விலகி இருத்தல், சுகாதாரம் பேணுதல், தொடர்ந்து நன்றாக கைகளை கழுவுதல், நோய் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவ ஆலோசனை பெறுதல், வீட்டிற்குள்ளும் வீட்டிற்கு வெளிப்புறத்திலும் கிருமி நாசினி கரைசலை தெளித்தல், பிறர் எவரையும் தொடாமல் இருந்தல் போன்ற விஷயங்களை பொதுமக்கள் நன்கு உணர்ந்து செயல்பட வைக்க வேண்டியது உங்களின் தலையாய கடமை ஆகும்.

எனவே நீங்கள் திங்கட்கிழமை (இன்று) முதல் வீடு வீடாக சென்று இந்த தகவலை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஒரு மனிதன் உடலுக்குள் அவனது சுவாசங்கள் வாயிலாக உட்புகக்கூடிய வைரஸ் கிருமியை அவரால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும். பிறரால் தடுக்க இயலாது. சுற்றுப்புறத்தில் உள்ளவைகளை கட்டுப்படுத்த அரசு பெருமுயற்சி எடுத்து வருகிறது. எனவே மக்களை காக்கவேண்டும் என அரசு அஞ்சுகிறது. அதை நிறைவேற்றிக்கொடுக்கும் பொறுப்பு நம்மிடம்தான் உள்ளது. கொரோனா போரை எதிர்கொள்ள தயாராவோம். அதற்கு நம் மக்களை நன்கு தயார் செய்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story