கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தற்காலிக காய்கறி மார்க்கெட் தினமும் மதியம் 12 மணிக்கு பிறகு இயங்காது


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தற்காலிக காய்கறி மார்க்கெட் தினமும் மதியம் 12 மணிக்கு பிறகு இயங்காது
x
தினத்தந்தி 24 March 2020 12:00 AM GMT (Updated: 23 March 2020 7:26 PM GMT)

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தஞ்சையில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட் தினமும் 12 மணிக்கு பிறகு இயங்காது. மீன்மார்க்கெட் 31-ந் தேதி வரை மூடப்படுகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் குழந்தைஏசு கோவில் அருகே தற்காலிக காமராஜர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் தினமும் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு வரை செயல்படும். பொதுமக்கள் எந்த நேரமும் இங்கு சென்று காய்கறிகளை வாங்குவர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நேற்று முன்தினம் மக்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தற்காலிக காமராஜர் மார்க்கெட்டிற்கும் விடுமுறை விடப்பட்டது. நேற்று காலை 4 மணி முதல் வழக்கம் போல மார்க்கெட் திறக்கப்பட்டது.

கைகழுவ ஏற்பாடு

இந்த நிலையில் காலையில் காய்கறி மார்க்கெட்டிற்கு வந்த பொதுமக்கள் அனைவரும் கைகளை கழுவிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதற்காக மார்க்கெட்டின் நுழைவுவாயில் பகுதியில் சோப்பு மற்றும் வாளியில் தண்ணீர் வைக்கப்பட்டது. பொதுமக்கள் சோப்பு மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னர் தான் காய்கறிகளை வாங்க சென்றனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தற்காலிக காமராஜ் மார்க்கெட் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அதிகாலை 4 மணி தொடங்கி மதியம் 12 மணி வரை செயல்படும். அதன் பின்னர் செயல்படாது. காய்கறிகள் எதுவும் விற்பனை செய்யப்பட மாட்டாது. எனவே பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு தஞ்சை மாநகர காமராஜ் மார்க்கெட் தலைமை காய்கனி வர்த்தக சங்கத்தினர் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

மீன்மார்க்கெட்

தஞ்சை கீழவாசலில் மீன்மார்க்கெட் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லறை விற்பனை மீன் கடைகள் உள்ளன. இங்கு ஆந்திரா, நாகப்பட்டினம், மல்லிப்பட்டினம், கல்லணை போன்ற பகுதிகளிலிருந்து தினமும் லாரிகளில் மீன்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை மீன்மார்க்கெட் முழுமையாக மூடப்படுகிறது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Next Story