தேனி உழவர் சந்தையில் கொரோனா முன்னெச்சரிக்கை: 3 அடி இடைவெளியில் நின்று காய்கறி வாங்கிய மக்கள்


தேனி உழவர் சந்தையில் கொரோனா முன்னெச்சரிக்கை: 3 அடி இடைவெளியில் நின்று காய்கறி வாங்கிய மக்கள்
x
தினத்தந்தி 24 March 2020 12:00 AM GMT (Updated: 23 March 2020 9:47 PM GMT)

தேனி உழவர் சந்தையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 அடி இடைவெளியில் நின்று மக்கள் காய்கறி வாங்கினர்.

தேனி,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் நேற்று முன்தினம் மக்கள் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. இதனால், தேனி மாவட்டத்தில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன. பஸ்கள், ஆட்டோ உள்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. நேற்று அதிகாலை 5 மணியுடன் மக்கள் ஊரடங்கு தளர்த்தி கொள்ளப்பட்டது.

இதையடுத்து நேற்று காலையில் பஸ்கள் வழக்கம்போல் ஓடின. ஆனால், கேரள மாநிலத்துக்கு பஸ், ஜீப் உள்ளிட்ட அனைத்து வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு இருந்தது. மாவட்டத்தில் உள்ள கம்பம்மெட்டு, போடிமெட்டு, குமுளி ஆகிய 3 கேரள மாநில எல்லைகளும் தொடர்ந்து மூடப்பட்டு இருந்தன.

மாவட்டம் முழுவதும் கடைகள் திறந்து இருந்தன. காலவரையின்றி மூடப்பட்ட பெரிய அளவிலான ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் தவிர்த்து மற்ற கடைகள் திறக்கப்பட்டு இருந்தன.

சாலையில் கோடு

மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் நேற்று வழக்கம் போல் செயல்பட்டது. உழவர் சந்தை நுழைவு வாயிலில் கைகள் கழுவுவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால், அதற்கு மக்கள் நெருக்கமாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் கடந்த சில நாட்களாக இருந்தது. இதையடுத்து தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் மற்றும் உழவர் சந்தை நிர்வாகம் சார்பில் நேற்று உழவர் சந்தைக்கு வெளியே சாலையில் சுமார் 200 மீட்டர் தூரம் வரை 3 அடி இடைவெளிக்கு வெள்ளை கோடுகள் வரையப்பட்டு இருந்தன.

ஒவ்வொரு கோட்டுக்கும் ஒருவர் வீதம் வரிசையில் நின்றனர். இதனால் காய்கறி வாங்க வந்தவர்கள் கை கழுவுவதற்கே அரை மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. கடைகளின் முன்பும் இடைவெளி விட்டு நின்று காய்கறி வாங்கி செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் உழவர் சந்தை பணியாளர்கள் அறிவுறுத்தியபடி இருந்தனர்.

வங்கிகள்

வங்கிகள் நேற்று காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்பட்டன. வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் பலரும் முககவசம் அணிந்து வந்தனர். வங்கி ஊழியர்களும் முக கவசம் அணிந்து பணியாற்றினர். பிற்பகல் 2 மணிக்கு பிறகு வங்கிகள் மூடப்பட்டன. இதனால், வங்கி சேவையை பெறுவதில் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. 

Next Story