வெளிநாட்டில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு திரும்பிய 97 பேருக்கு மருத்துவ கண்காணிப்பு; வீடுகளில் எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது


வெளிநாட்டில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு திரும்பிய 97 பேருக்கு மருத்துவ கண்காணிப்பு; வீடுகளில் எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது
x
தினத்தந்தி 24 March 2020 4:45 AM IST (Updated: 24 March 2020 4:23 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு திரும்பிய 97 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இவர்களின் வீடுகளுக்கு முன்பு எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

திருப்பூர், 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் அதிகம் பேர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு வந்தவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களுக்கு மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் வீட்டிலேயே தங்கியிருக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து கூட தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 2 நாட்களுக்கு முன்பு வரை 56 பேர் வெளிநாட்டில் இருந்து திரும்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவரவர் வீடுகளிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றிலும் கிருமிநாசினி தெளித்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் அந்த வீட்டின் முன்பு எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

அதில் ‘கொரோனா தொற்று உள்ளே நுழையாதே, தனிமைப்படுத்தப்பட்ட வீடு’ என்று குறிப்பிட்டு, 14 நாட்களை பின்னிட்டு தேதி குறிப்பிட்டுள்ளது. மொத்தம் அந்த வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கையையும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். மேற்கண்ட தேதி வரை மற்ற நபர்கள் அந்த வீட்டுக்குள் நுழைய வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

வெளிநாட்டில் இருந்து திருப்பூர் திரும்பியவர்கள் பலர் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்காமல் வழக்கம் போல் வீதிகளில் நடமாடி வருகிறார்கள். அவர்களுக்கு ஒருவேளை கொரோனா வைரஸ் தொற்று இருந்தால் மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்பு இருப்பதால் அதை தடுக்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு திரும்பியவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு தாங்களாகவே முன்வந்து தகவல் தெரிவித்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று மட்டும் 14 பேர் தாங்கள் வெளிநாட்டில் இருந்து திரும்பியிருப்பதாக தாங்களாகவே முன்வந்து கலெக்டர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்பூர் மாநகர் நல அதிகாரி பூபதி கூறும்போது, ‘பொது வீதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் வகையில் 5 வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள நவீன கருவி மூலமாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மாநகர பகுதியில் வெளிநாட்டில் இருந்து 32 பேர் திருப்பூர் திரும்பியிருக்கிறார்கள். அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

28 நாட்கள் வரை அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள். 560 பணியாளர்கள் கிருமிநாசினி தெளிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்’ என்றார்.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று இரவு 9 மணி வரை வெளிநாட்டில் இருந்து திரும்பிய மொத்தம் 97 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story