திருப்பூரில் வருகிற 31-ந் தேதி வரை பனியன் நிறுவனங்கள் மூடல் - வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதில் சிக்கல்


திருப்பூரில் வருகிற 31-ந் தேதி வரை பனியன் நிறுவனங்கள் மூடல் - வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதில் சிக்கல்
x
தினத்தந்தி 24 March 2020 5:00 AM IST (Updated: 24 March 2020 4:47 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்க திருப்பூரில் வருகிற 31-ந் தேதி வரை பனியன் நிறுவனங்கள் மூடப்படுகிறது. இருப்பினும் வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர், 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோல் தமிழகத்தில் இருந்தும் வெளிமாநிலங்களுக்கு செல்வதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தமிழகம் முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியில் இருந்து வருகிற 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுபோல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் இந்த தடை அமல்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பூரில் பின்னலாடை தொழில் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

இந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடம், வாகனவசதி போன்றவை நிறுவனங்கள் சார்பில் செய்து கொடுக்கப்படுகின்றன. இதில் தங்கியிருந்து தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். மேலும், பலர் வாடகை வீடுகளில் தங்கியிருந்தும் வேலை செய்து வருகிறார்கள்.

வேலைவாய்ப்பு அதிகமாக இருந்து வருவதால் திருப்பூருக்கு தினமும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வேலை தேடி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக தொழிலாளர்களின் வருகை குறைவாக இருந்தது. மேலும், தொழிலாளர்களை வேலைக்கு சோ்த்து விடும் முகவர்களிடமும் தொழிலாளர்களை வெளிமாநிலங்களில் இருந்து அழைத்து வர வேண்டாம் எனவும் தொழில்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.

இதற்கிடையே திருப்பூரில் இருந்து பல நாடுகளுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. நடப்பு கோடை கால சீசன் தொடங்கிய நிலையில், இதற்கான ஆர்டர்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளிடம் இருந்து பெற்று, அதற்கான ஆடை தயாரிப்பு தீவிரமாக திருப்பூரில் நடந்து வந்தது. ஆடைகள் தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்றது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், திருப்பூருக்கு வெளிநாடுகளில் இருந்து கொடுக்கப்பட்ட ஆர்டர்கள் அனைத்தையும் வர்த்தகர்கள் ரத்து செய்துவிட்டனர். இதனால் பல கோடி ரூபாய்க்கு மேல் ஆடைகள் வர்த்தகம் செய்ய முடியாமல் நிறுவனங்களில் தேக்கமடைந்துள்ளது.

மேலும், கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் செய்த வர்த்தகம் என ரூ.6 ஆயிரம் கோடிக்கு பணம் வர்த்தகர்களிடம் இருந்து கிடைக்காமல், நிலுவையில் இருப்பதால், தொழில்துறையினர் கவலையில் இருந்தனர். இதற்கிடையே அனைத்து பின்னலாடை தொழிற்சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தொடர்ந்து தொழிலாளர்களை வைரஸ் பாதிப்பு ஏற்படாமல், பாதுகாப்புடன் ஆடை தயாரிப்பில் ஈடுபடுத்துவது, தொடர்ந்து ஆடை தயாரிப்பை நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர்.

இந்நிலையில் திருப்பூரில் அருகில் உள்ள மாவட்டமான ஈரோடு மற்றும் கோவையில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் உள்ளிட்ட பின்னலாடை தொழிற்சங்க நிர்வாகிகளுடன், கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையின் முடிவில் தொழிலாளர்களின் நலன் கருதியும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் வருகிற 31-ந் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் மூடப்படுவதாகவும், ஆடை தயாரிப்பு நிறுத்தப்படுவதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் ஒருவித அசாதரண சூழல் நிலவி வருகிறது. திருப்பூரில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. எனவே இந்த வைரஸ் திருப்பூரில் பரவுவதை தடுக்கவும், தொழிலாளர்களை பாதுகாக்கவும் ஆலோசனை மேற்கொண்டோம். அதன்படி வருகிற 31-ந் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் மூடப்படும். இதனால் தொழிலாளர்களுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ஏற்பாடு மற்றும் அவர்களுக்கு உணவுக்கான ஏற்பாடு போன்றவற்றை செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம்.

தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இது அரசாங்கம் தான் வழங்க வேண்டும். தொழில்துறையினருக்கு கடந்த 3 மாதத்தில் மட்டும் ரூ.7 ஆயிரத்து 800 கோடி வரை வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாதம் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500 கோடி வரை ஏற்றுமதி ஏற்படும் காலத்தில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் தான் எங்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத்தொகை கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தற்போது இந்த பிரச்சினை ஏற்பட்டு விட்டது.

நிறுவனங்கள் மனிதாபிமான அடிப்படையில் விடுதிகளில் தங்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு 3 நேர உணவு மட்டும் தான் வழங்க வேண்டும். இதுபோன்று வேலை இல்லாத நாட்களில் அரசு பின்னலாடை தொழிலாளர்களுக்கு பிடித்தம் செய்து வரும், பி.எப். மற்றும் இ.எஸ்.ஐ. தொகைகளை ஒதுக்க வேண்டும். இந்த தொழிலாளர்களுக்கு வங்கி கணக்கு உள்ளது. இந்த வங்கி கணக்கில் அரசு குறிப்பிட்ட அளவு தொகைகளை செலுத்தி உதவி செய்ய வேண்டும். இதனால் தொழிலாளர்களும் பயன்பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பூரில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். தற்போது நாடு முழுவதும் ரெயில் சேவை தடைபட்டுள்ளதால், அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதில் சிக்கல் உள்ளது. இதனால் இந்த தொழிலாளர்களுக்கு தங்குமிடங்களில் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிக்கு தேவையான பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை அந்தந்த நிறுவனங்கள் செய்துள்ளன.

Next Story