ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 133 விசாரணை கைதிகளுக்கு பரோல்


ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 133 விசாரணை கைதிகளுக்கு பரோல்
x
தினத்தந்தி 24 March 2020 10:30 PM GMT (Updated: 24 March 2020 5:22 PM GMT)

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மத்திய, கிளை ஜெயில்களில் அடைக்கப்பட்டிருந்த 133 விசாரணை கைதிகளுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

வேலூர், 

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

ஒரே இடத்தில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு ஜெயில்களில் 7 ஆண்டுகள் வரை தண்டனை பெற்ற குற்றவாளிகள் மற்றும் 7 ஆண்டுகள் வரை குற்றப்பிரிவின் கீழ் அடைத்து வைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அவர்களை 4 முதல் 6 வாரங்கள் வரை பரோலில் விடுவிப்பது தொடர்பாக மாநில சட்டச்சேவை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துமாறு மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மத்திய ஜெயில்கள், கிளை ஜெயில்களில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளுக்கு நேற்று பரோல் வழங்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் 42 பேருக்கும், பெண்கள் மத்திய ஜெயிலில் 13 பேருக்கும், அரக்கோணம், வாலாஜா கிளை ஜெயில்களில் தலா ஒருவருக்கும், குடியாத்தம் கிளை ஜெயிலில் 6 பேருக்கும், வாணியம்பாடி கிளை ஜெயிலில் 3 பேருக்கும், திருப்பத்தூர் கிளை ஜெயிலில் 3 பேருக்கும் என்று 69 விசாரணை கைதிகளுக்கு பரோல் வழங்கப்பட்டது.

அதேபோன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை கிளை ஜெயிலில் 36 பேருக்கும், போளூர் கிளை ஜெயிலில் 19 பேருக்கும், செங்கம் கிளை ஜெயிலில் 5 பேருக்கும், வந்தவாசி கிளை ஜெயிலில் 4 பேருக்கும் என்று 64 பேருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மத்திய, கிளை ஜெயில்களில் அடைக்கப்பட்டிருந்த 133 விசாரணை கைதிகளுக்கு நேற்று காலை பரோல் வழங்கப்பட்டது. அவர்களின் வழக்குகள் கோர்ட்டிற்கு விசாரணைக்கு வரும்போது நேரில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story