பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு: கொரோனா வைரஸ் காரணமாக களையிழந்த மாணவர்கள் கொண்டாட்டம்


பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு: கொரோனா வைரஸ் காரணமாக களையிழந்த மாணவர்கள் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 25 March 2020 5:00 AM IST (Updated: 24 March 2020 11:10 PM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று நிறைவுபெற்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக மாணவ, மாணவிகளின் கொண்டாட்டம் களையிழந்தது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு மாணவ, மாணவிகளுக்கு தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்களை சேர்த்து 19 ஆயிரத்து 157 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் 84 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று பிளஸ்-2 தேர்வு நிறைவடைந்தது. இறுதியாக உயிரியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட தேர்வுகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

மாணவ, மாணவிகள் கொண்டாட்டம்

இந்நிலையில் தற்போது தமிழகத்திலும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதால், பிளஸ்-2 தேர்வு நிறைவுபெற்றதால் மாணவ, மாணவிகளின் கொண்டாட்டம் களையிழந்தது. பெரும்பாலான மாணவ, மாணவிகள் கைக்குலுக்குவது, கட்டிப்பிடிப்பது, செல்பி எடுப்பது போன்றவற்றை தவிர்த்து, வணக்கம் தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனர்.

இருப்பினும் ஒரு சில மாணவ, மாணவிகள் தங்களது புத்தக பைகளை தூக்கி போட்டு பிடித்தும், வண்ண சாயப்பொடியை ஒருவருக்கொருவர் தூவியும், கட்டி பிடித்து கொண்டும், செல்பி எடுத்துக்கொண்டும் பிரியா விடை பெற்றனர். மேலும் மாணவ, மாணவிகள் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டனர். மற்ற வகுப்புகளுக்கு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை கிடைத்து உள்ளது. இந்த நீண்ட விடுமுறையை பயனுள்ள வகையில் கழித்து, அடுத்து வரும் கல்லூரி படிப்பை புத்துணர்வுடன் எதிர்நோக்கி இருப்பதாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

Next Story