பிளஸ்-2 தேர்வு முடிந்தது; மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி
பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி தேர்வு எளிதாக இருந்ததால் மாணவ-மாணவிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பூர்,
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இந்த நிலையில் கடைசி தேர்வான வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் ஆகிய 3 பாடங்களுக்கான தேர்வு நேற்று நடைபெற் றன. வழக்கமாக 10.15 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த தேர்வு கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 10.45 மணிக்கு தொடங்கி மதியம் 1.45 மணிக்கு முடிவடைந்தது. தேர்வுகள் எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் வேதியியல் தேர்வை பள்ளி மாணவர்கள் 9,743 பேர், தனித்தேர்வர்கள் 38 பேர் என்று மொத்தம் 9,781 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களில் பள்ளி மாணவர்கள் 9,301 பேர், தனித்தேர்வர்கள் 29 பேர் என்று மொத்தம் 9,330 பேர் எழுதினார்கள். பள்ளி மாணவர்கள் 442 பேர், தனித்தேர்வர்கள் 9 பேர் என்று மொத்தம் 451 பேர் தேர்வு எழுத வரவில்லை.
கணக்குப்பதிவியல் தேர்வை பள்ளி மாணவர்கள் 13,741 பேர், தனித்தேர்வர்கள் 171 பேர் என்று மொத்தம் 13,912 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களில் பள்ளி மாணவர்கள் 12,958 பேர், தனித்தேர்வர்கள் 123 பேர் என்று மொத்தம் 13,081 பேர் எழுதினார்கள். பள்ளி மாணவர்கள் 783 பேர், தனித்தேர்வர்கள் 48 பேர் என்று மொத்தம் 831 பேர் தேர்வை எழுத வரவில்லை.
புவியியல் தேர்வை பள்ளி மாணவர்கள் 328 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களில் 286 பேர் தேர்வை எழுதினார்கள். 42 பேர் தேர்வை எழுத வரவில்லை. எந்த வித ஒழுங்கீனமான செயல்களும் இல்லாமல் தேர்வு அமைதியாக நடைபெற்று முடிந்ததாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற தேர்வுகளை எழுதி விட்டு தேர்வு மையங்களை விட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகளிடம் கேட்ட போது, தேர்வு எளிதாக இருந்ததாக தெரிவித்தனர்.
காவியா (மைக்ரோ கிட்ஸ்): வேதியியல் பாட தேர்வில் கேட்கப்பட்டிருந்த வினாக்கள் அனைத்தும் எளிதாகவே இருந்தது. இதனால் அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதி விட்டேன்.
பிரியதர்சினி (ஜெய்வாபாய் பள்ளி): கணக்குப்பதிவியல் தேர்வு எளிதாக இருந்தது. தேர்வில் கேட்கப்பட்டிருந்த பெரும்பாலான வினாக்கள் நான் நன்கு படித்து மனப்பாடம் செய்து வைத்திருந்த வினாக்களாகவே இருந்தது.
காயத்ரி (ஜெய்வாபாய் பள்ளி): புவியியல் பாடத்தில் கேட்கப்பட்டிருந்த 2, 3 மதிப்பெண்களுக்கான வினாக்கள் அனைத்தும் பாடத்தின் உட்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தாலும் மிகவும் எளிதாகவே இருந்தது. இவ்வாறு மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story