11 இடங்களில் சோதனை சாவடி கலெக்டர் ரத்னா பேட்டி


11 இடங்களில் சோதனை சாவடி கலெக்டர் ரத்னா பேட்டி
x
தினத்தந்தி 25 March 2020 4:30 AM IST (Updated: 24 March 2020 11:54 PM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் 11 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

அரியலூர்,

கொரோனா வைரஸ் நோய் உலக அளவில் பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்ட நிலையில் உலக சுகாதார நிறுவனம் இதனை தற்போது உலகளாவிய நோய் தொற்றாக அறிவித்துள்ளது.

இந்திய அளவிலும், தமிழகத்திலும் பல்வேறு அவசர கால நடவடிக்கையின் அடிப்படையில் நோய் தொற்று பரவா வண்ணம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கூட்டமாக இருக்க வேண்டாம் எனவும், ஒருவருக்கு ஒருவர் பேசும் போது தங்களுக்குள் இடைவெளி விட்டு நின்று பேசவும் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்குள் இடைவெளி விட்டு இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 24 மணி நேரமும் மருத்துவக்குழுக்கள் கண்காணித்து வருகின்றனர். வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு மருத்துவ சோதனையும் செய்யப்பட்டு வருகிறது.

11 சோதனை சாவடிகள்

மாவட்ட அளவில் 11 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு மாவட்டத்திற்குள் வரும் நபர்கள் பரிசோதனை செய்து, கண்காணிக்கப்பட உள்ளனர். தடைஉத்தரவை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள், பால் ஆகியவைகள் எவ்வித தடையுமின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பொது இடத்தில் 5 நபர்களுக்கு மேல் கூடுவது தவிர்க்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளை தவிர பொதுமக்கள் யாரும் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

இத்தடைக்காலத்தில் அத்தியாவசிய பொருட்களான உணவு பொருட்கள், மருந்து பொருட்கள் போன்றவற்றின் போக்குவரத்துக்கு எந்தவொரு தடையும் ஏற்படாத வண்ணம் செயல்படும். குடும்பத்தினர் நோய் தொற்று ஏற்படாத வண்ணம் தனி நபர் சுகாதாரம் கடைபிடிக்க வேண்டும். மேலும், அரியலூர் மாவட்டத்திலிருந்து பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்கு சென்று தற்போது சொந்த ஊர் திருப்பியுள்ள 278 நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

200 படுக்கைகள்

அவர்கள் மருத்துவக்குழுவினரால் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வரு கின்றனர். மேலும், மாவட்ட கட்டுப்பாட்டு அறையிலுள்ள மருத்துவக்குழுவினரால் அலைபேசி வாயிலாக தினந்தோறும் அவர்கள் தொடர்பு கொண்டு தங்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பான அறிகுறிகள் சளி, காய்ச்சல் மற்றும் இதர உடல் உபாதைகள் ஏதேனும் உள்ளதா என விசாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அவர்கள் குறித்த விபரங்கள் www.stop-c-o-r-o-na.tn.gov.in, www.stop-c-o-r-o-n-atn.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள நபர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தி அவர்களின் வீட்டு முகப்பு பகுதிகளில் ஒட்டுவில்லைகள் ஒட்டி, மற்றவர்கள் யாரும் அந்த வீட்டுக்குள் நுழையாமல் கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது. அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைகளில் 200 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் தயார் நிலையில் உள்ளன. தேவையில்லாமல் கைகளை வாய், மூக்கு, கண்களில் வைக்க வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மருத்துவக்கல்லூரி தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், கோட்டாட்சியர் பாலாஜி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிச்சாமி மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


Next Story