144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது: காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளில் குவிந்த பொதுமக்கள்


144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது: காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளில் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 25 March 2020 12:00 AM GMT (Updated: 24 March 2020 6:31 PM GMT)

144 தடை உத்தரவு நேற்று மாலை முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி நேற்று காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர். பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

கரூர்,

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் மக்களை தனிமைப்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கலாம் என்ற நோக்கில் கடந்த 22-ந்தேதி பிரதமர் அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கினை கடைபிடித்தனர். அதன்படி கரூர் மாவட்டத்தில் அன்றைய தினம் மக்கள் வீடுகளில் முடங்கினர். ஏற்கனவே கரூர் மாவட்டத்தில் திருமண மண்டபங்கள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை அரசு அறிவுறுத்தலின் பேரில் வருகிற 31-ந்தேதி வரை மூடப்பட்டு விட்டன. மேலும் நகை கடை, ஜவுளி கடைகள், ஜவுளி உற்பத்தி பொருட்கள் மற்றும் கொசுவலை ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளிட்டவைகளும் வருகிற 31-ந்தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் நேற்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இதையொட்டி மளிகைப்பொருட்கள், காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மட்டும் தனியாக சென்று தேவைக்கேற்ப பொதுமக்கள் வாங்கி கொள்ளலாம். கூட்டமாக எங்கும் செல்லக்கூடாது. மேலும் நேற்று மாலை 6 மணிக்கு மேல் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படாது என்று அரசு சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

பொருட்கள் வாங்க குவிந்தனர்

இந்நிலையில் கரூரில் நேற்று காலை கரூர் காமராஜர் மார்க்கெட், கரூர் உழவர் சந்தை வெளிப்புறம் போடபட்டிருந்த தற்காலிக கடைகளில் மக்கள் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க குவிந்தனர். ஓட்டல்கள், தள்ளுவண்டி உணவகங்கள், பிரத்யேக அசைவ உணவு கடைகள் திறந்திருந்த போதும்கூட அதில் உணவு விற்பனை வழக்கத்தை விட குறைவாகவே இருந்தது.

கரூர் ஜவகர்பஜாரில் குறிப்பிட்ட சில கடைகள் மற்றும் நிறுவனங்கள் மட்டுமே திறந்திருந்தன. அங்கு பொருட்கள் வாங்க வந்திருந்த மக்கள் பலரும் முககவசம், கையுறை உள்ளிட்டவை அணிந்தே வந்திருந்தனர். நாமக்கல்லில் இருந்து கொண்டு வரப்பட்ட சட்டைகள் சாலையோரத்தில் விற்பனைக்காக வைக்கப்பட் டிருந்தன. கரூர் ஜவகர் பஜார் உள்ளிட்ட இடங்களில் தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்டவற்றின் சார்பில் முக கவசங்கள் இலவசமாக வினியோகம் செய்யப்பட்டன. மேலும் கரூர் திண்ணப்பா கார்னர், கோவைரோடு, பழைய பைபாஸ்ரோடு, வெங்கமேடு உள்ளிட்ட இடங்களில் உள்ள மருந்தகங்களில் முககவசம் வாங்க மக்கள் பலர் ஆர்வத்துடன் சென்றதால் அங்கு கூட்டம் அலைமோதியது.

கிருமி நாசினி தெளிப்பு

கரூர் நகராட்சி அலுவலகத்தில் வரி செலுத்துவதற்கான கவுண்ட்டர்கள் திறந்திருந்தன. அந்த அறையின் முன்பு பணியாளர்கள் திரவசோப்பு உள்ளிட்டவற்றை வைத்துக்கொண்டு அங்கு வருபவர் களிடம் கைகளை கழுவி ஆரோக்கியத்தை கடைபிடிக்குமாறு வலியுறுத்தியதோடு, துண்டு பிரசுரம் வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் அந்த விழிப்புணர்வு மேஜை மற்றும் நகராட்சி அலுவலகம் உள்ளிட்டவற்றில் தூய்மை பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப் பட்டது.

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நுழைவு வாயிலில் தூய்மை பணியாளர் ஒருவர் கிருமிநாசினியுடன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தார். கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை சுற்றிலும் கிருமிநாசினி தெளித்த பின்னரே அதனை உள்ளே அனுமதித்தனர். பின்னர் கலெக்டர் அலுவலக அறை முன்பு வைக்கப்பட்டிருந்த தற்காலிக தண்ணீர் தொட்டியில் நன்றாக கைகளை கழுவிய பிறகே அதிகாரிகள் முதல் அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நிர்வாக பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள், போலீசார் ஆகியோர் முக கவசம் அணிந்து பணியாற்றியதை காண முடிந்தது.

முண்டியடித்து ஏறினர்

கரூர் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள கரூர் கிளை சிறையில் மொத்தம் 54 கைதிகள் தங்கும் வகையில் 14 அறைகள் உள்ளன. தற்போது இங்கு 5 கைதிகள் மட்டுமே உள்ளனர். கரூர் கிளை சிறையிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுழற்சி முறையில் மஞ்சள்பொடி கலந்த நீர் தெளிக்கப்படுகிறது. கைதிகள் மற்றும் போலீசாருக்கு தனித்தனியாக சோப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சிறைவாசிகளை உறவினர்கள், வக்கீல் ஆகியோர் நேரில் பார்ப்பது உள்ளிட்ட அனைத்தும் வருகிற 31-ந்தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. சிறை நுழைவு வாயிலில் வேப்பிலைகள் வைக்கப்பட்டு உள்ளது.

கரூர் மண்டலத்துக்கு உட்பட்ட கரூர் கிளை 1-2, அரவக்குறிச்சி உள்ளிட்ட பணி மனைகளில் உள்ள 262 பஸ்களில் 256 பஸ்கள் இயக்கப்பட்டன. புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு மட்டும் பஸ் போக்குவரத்து இல்லை. திருப்பூர், ஈரோடு, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களுக்கும், கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன. எப்படியாவது வீட்டுக்கு சென்று விட வேண்டும் என்ற நோக்கத்தில் பயணிகள் பலரும் தங்கள் ஊருக்கு செல்லும் பஸ்சை தேடி பிடித்து, முண்டியடித்துக்கொண்டு ஏறி பயணம் மேற்கொண்டனர். இதனால் பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

எம்.எல்.ஏ. அலுவலகம் மூடல்

கரூர் நகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் தற்காலிக கூடாரம் அமைத்து பயணிகளுக்கு துண்டுபிரசுரம் வினியோகித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டதோடு, சர்ஜிகல் ஸ்பிரிட் உள்ளிட்டவை கையில் ஊற்றி சுத்தப்படுத்திட வழிவகை செய்யப்பட்டது. தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பயணிகளின் வெப்பநிலை கண்டறிந்து கூறப்பட்டது. கரூர் ரெயில் நிலையத்தில் 31-ந்தேதி வரை ரெயில் சேவை கிடையாது என்பதால் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மட்டும் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், கரூர்-திருச்சி பயணிகள் ரெயில் ஆகியவை கரூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

கரூர் பிரம்மதீர்த்தம் சாலையில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகம் மூடப்பட்டிருந்தது. அதன் வெளிப்புற கதவில் “விடுமுறை” என எழுதப்பட்ட பதாகை தொங்கவிடப்பட்டிருந்தது. மேலும் நூலகம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களும் மூடப்பட்டிருந்தன. ரேஷன் கடைகளில் மக்கள் இடைவெளி விட்டு நின்று அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்சென்றனர். டாஸ்மாக் கடைகள் வழக்கம்போல் நேற்று மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டன. சில மணி நேரம் மட்டுமே கடைகள் செயல்படும் என கூறப்பட்டதால் மதுபாட்டில்கள் வாங்க கூட்டம் அலைமோதியது. கரூர் செங்குந்தபுரம், மாரியம்மன்கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள வங்கிகளில் 4 மணி நேரம் மட்டுமே பணிகள் நடந்தன. பணம் எடுத்தல், செலுத்துதல் உள்ளிட்டவற்றுக்கான படிவங்கள் வங்கிக்கு வெளியே மேஜை போடப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. வாடிக்கையாளர்கள் படிவங்களை பூர்த்தி செய்த பிறகு, கைகழுவும் திரவத்தால் கையினை நன்றாக சுத்தப்படுத்திய பிறகே வங்கிக்குள் ஒவ்வொருவராக அனுப்பி வைக்கப்பட்டனர். ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க பலர் வந்தனர்.

லாரிகள் நிறுத்தம்

கரூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவரும், அனைத்து வர்த்தக சங்க தலைவருமான வக்கீல் ராஜூவிடம் கேட்டபோது, கரூரில் உள்ள ஜவுளி, கொசுவலை, விவசாய விளை பொருட்கள் உள்ளிட்டவை லாரிகளில் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் நாளொன்றுக்கு கோடிக்கணக்கில் உற்பத்தி பொருட்கள் தேங்கியுள்ளன. வணிகரீதியாக பின்னடைவும் ஏற்பட்டுள்ளது. எனினும் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலுமாக ஒழிப்பதற்கு அரசு உத்தரவினை பின்பற்றி தான் லாரிகளை நிறுத்தியுள்ளோம், என்றார். கரூர் மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் வர்த்தகம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது என்று வணிகர்கள் தெரிவித்தனர்.

குளித்தலை

144 தடை உத்தரவை தொடர்ந்து கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து திருச்சி மாவட்டம் முசிறி செல்லும் சாலையில் குளித்தலை சுங்ககேட் அருகிலும், கரூர்-திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலும், குளித்தலை அருகே மருதூர் பகுதியில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடி பகுதியிலும் போலீசார் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. உரிய காரணங்கள் இல்லாமல் இந்த பகுதியை வாகனங்கள் உள்ளிட்டவை கடக்க போலீசார் அனுமதிக்கவில்லை.

காய்கறிகளின் விலை ஏற்றம் காணலாம் என்ற அச்சத்தில் பொதுமக்கள் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதில் தீவிரம் காட்டினர். குளித்தலையில் உள்ள உழவர் சந்தைக்கு எதிரே சாலையில் அமைக்கப்பட்டிருந்த காய்கறி கடைகளுக்கு நேற்று அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் வந்து, காய்கறிகளை வாங்கிச்சென்றனர். இதேபோல் மளிகை கடைகளிலும் பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

மதுப்பிரியர்கள் குவிந்தனர்

குளித்தலையில் உள்ள அரசு மதுபானக்கடையில் மதுபானங்கள் வாங்க மதுப்பிரியர்கள் குவிந்தனர். குளித்தலை அரசு பணிமனையில் இருந்து இயக்கப்படும் பஸ்களில் பெரும்பாலானவை நேற்று மாலை 6 மணிக்குள் குளித்தலை அருகேயுள்ள அரசு பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் பலர் மோட்டார் சைக்கிள்களில் தங்கள் ஊருக்கு சென்றனர்.

Next Story