புதுக்கோட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல் பஸ் இல்லாமல் தவித்த பயணிகள்


புதுக்கோட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல் பஸ் இல்லாமல் தவித்த பயணிகள்
x
தினத்தந்தி 25 March 2020 12:00 AM GMT (Updated: 24 March 2020 6:54 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இதனால் பஸ் போக்கு வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

புதுக்கோட்டை,

144 தடை உத்தரவு நேற்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதியத்திற்கு பிறகு பஸ்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு பிறகு போலீசார் பஸ் நிலையத்தில் குவிக்கப்பட்டனர், அவர்கள் அங்கு நின்றிருந்த பயணிகளிடம், எங்கு செல்ல வேண்டும் எனக்கேட்டு, அவர்களுக்கு தடை உத்தரவு பற்றி எடுத்து கூறி செல்ல வேண்டிய ஊருக்கு அனுப்பி வைத்தனர். மாலை 6 மணிக்கு பிறகு பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து அனைத்து அரசு பஸ்களும், அந்தந்த போக்குவரத்து கழக பணி மனையில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதேபோல லாரிகள், ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள் போன்ற அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டது. இதேபோல் மாலை 6 மணிக்கு பிறகு ஒரு சில மளிகை, காய்கறி கடைகள், மருந்து கடைகள் தவிர பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் நேற்று மாலை முதல் புதுக்கோட்டை நகரில் உள்ள கீழராஜவீதி, மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி உள்பட நகரின் முக்கிய வீதிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் வெறிச்சோடின.

பயணிகள் அவதி

இந்நிலையில் வெளியூர்களில் இருந்து வந்த பயணிகள் 200-க்கும் மேற்பட்டவர்கள் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். அவர்கள் பஸ் இல்லாமல் கடும் அவதி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து, அந்த பயணிகள் திருச்சி, மதுரை, ஆலங்குடி, அறந்தாங்கி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு வேன்களை ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

இதற்கிடையில் ஆலங்குடியை நோக்கி ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரியில் 30-க்கும் மேற்பட்டவர்கள் ‘லிப்ட்’ கேட்டு சென்றனர். சுமார் 9 மணிக்கு பிறகுதான் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறையத்தொடங்கியது. இதற்கிடையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் மற்றும் போலீசார் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு, சாலையில் நின்று கொண்டிருந்தவர்களை வீட்டிற்கு செல்லும்படி அறிவுறுத்தினார்கள். இந்தநிலையில் பொன்னமராவதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் அதிகளவு மதுபிரியர்கள் கூடியதால் போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர்.

Next Story