போலீசுக்கு பயந்து பீர் பாட்டிலால் குத்திக்கொண்டு வாலிபர் தற்கொலை


போலீசுக்கு பயந்து பீர் பாட்டிலால் குத்திக்கொண்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 25 March 2020 5:30 AM IST (Updated: 25 March 2020 2:29 AM IST)
t-max-icont-min-icon

வேப்பேரியில் போலீசுக்கு பயந்து பீர் பாட்டிலை உடைத்து கழுத்தில் குத்திக்கொண்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை, 

சென்னை வேப்பேரி டவுட்டன் பாலம் அருகில் வசிப்பவர் கார்த்திக்(வயது 26). இவரும் நந்தினி(36) என்ற பெண்ணும் கடந்த 7 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வருகின்றனர். கார்த்திக் டவுட்டன் பாலம் அருகில் உள்ள சர்ச்சில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை நந்தினி தனது வீட்டில் குளித்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் முருகன்(40) என்பவர், நந்தினி குளித்துக்கொண்டிருந்ததை எட்டிப்பார்த்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட நந்தினி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கார்த் திக் வீட்டிற்கு வந்ததும், இது குறித்து அவரிடம் கூறினார்.

இதையடுத்து கார்த்திக் மற்றும் நந்தினி, முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து கார்த்திக் வேப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அவர்கள் அனைவரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு டவுட்டன் பாலம் அருகில் நின்று கார்த்திக் மீண்டும் முருகனிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டார். ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை கலைந்து போகும்படி கூறினர். ஆனால் கார்த்திக் போலீஸ் கூறியதை கேட்காமல் தொடர்ந்து வாக்குவாத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல முயன்றனர். இந்தநிலையில் போலீசாருக்கு பயந்து கார்த்திக் அருகில் கிடந்த பீர் பாட்டிலை உடைத்து கழுத்து மற்றும் மார்பில் பலமாக குத்திக்கொண்டார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். போலீசார் அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கார்த்திக் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story