தர்மபுரி மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை சரிவு குப்பை வண்டியில் ஏற்றி சென்றனர்


தர்மபுரி மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை சரிவு குப்பை வண்டியில் ஏற்றி சென்றனர்
x
தினத்தந்தி 25 March 2020 4:00 AM IST (Updated: 25 March 2020 2:46 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை சரிவால் அவற்றை குப்பை வண்டியில் நகராட்சி ஊழியர்கள் ஏற்றி சென்றனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் சாமந்தி, மல்லிகை உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்த பூக்களை விவசாயிகள் தர்மபுரியில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். கொரோனா வைரஸ் தொற்று பீதி காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக பூக்கள் விற்பனை குறைந்தது.

இந்த நிலையில் நேற்று தர்மபுரி பூ மார்க்கெட்டுக்கு வந்த சாமந்தி உள்ளிட்ட பூக்கள் விற்பனை மிகவும் குறைந்தது. கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் இன்று (புதன் கிழமை) தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு பூக்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.

குப்பை வண்டிகளில்...

இதேபோல் கோவில்கள் அனைத்திலும் பொதுமக்கள் கூடி வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், கோவில்களின் சிறப்பு பூஜைகளுக்கான பூக்கள் பயன்பாடும் குறைந்து விட்டது. இதனால் நேற்று பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்ட பூக்கள் விற்பனையாகாமல் குவிந்து கிடந்தன. மேலும் பூக்கள் விலையும் சரிவடைந்தது.

இந்த பூக்களை இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியாத சூழல் நிலவியதால் வியாபாரிகள் பூக்களை மார்க்கெட்டிலேயே விட்டு சென்றனர். இந்த பூக்களை நகராட்சி ஊழியர்கள் குப்பை வண்டிகளில் ஏற்றி சென்று குப்பை கிடங்கில் கொட்டினர். பூக்கள் விலை குறைவால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மிகப்பெரிய நஷ்டத்திற்கு உள்ளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Next Story