ஆவடி அருகே, கிருஷ்ணா கால்வாயில் மூழ்கிய சகோதரர்கள்


ஆவடி அருகே, கிருஷ்ணா கால்வாயில் மூழ்கிய சகோதரர்கள்
x
தினத்தந்தி 24 March 2020 11:15 PM GMT (Updated: 24 March 2020 10:20 PM GMT)

ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த இரட்டை சகோதரர்கள் நீரில் மூழ்கி மாயாமாகினர்.

ஆவடி, 

ஆவடியை அடுத்த திருநின்றவூர் பிரகாஷ் நகர், டவர் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 43). திருநின்றவூரில் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலைமதி (37) இவர்களுக்கு ஜேனட் ஜாய் (16) என்ற மகளும், ஜஸ்டின் (13) ஜெபஸ்டின் (13) ஆகிய இரட்டை ஆண்பிள்ளைகளும் உண்டு. சிறுவர்கள் 2 பேரும், திருநின்றவூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தனர். மகள் பிளஸ்-2 வகுப்பில் தேர்வு எழுதி உள்ளார்.

இந்த நிலையில், சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த குடும்பத்தினர், கடந்த 3 ஆண்டுகளாக திருநின்றவூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக விடுமுறையில் இருந்த இரட்டை சகோதரர்களான ஜஸ்டின், ஜெபஸ்டின் ஆகிய இருவரும் நேற்று காலை வீட்டில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். பின்னர், நண்பர்களுடன் சேர்ந்து ஆவடி அடுத்த மிட்டனமல்லி கண்டிகை பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் கால்வாயில் குளித்துக்கொண்டிருந்த போது, மிதமாக சென்றுக்கொண்டிருந்த தண்ணீர் திடீரென வேகமாக வந்த போது, இரட்டை சகோதரர்களாகிய சிறுவர்கள் இருவரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதை பார்த்து அங்கு குளித்துக்கொண்டிருந்த நண்பர்கள் அதிர்ச்சியில் கூச்சலிட்டபடியே வெளியே ஓடிவந்தனர்.

இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் ஆவடி தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் அளித்தனர். இதையறிந்த சிறுவர்களின் பெற்றோர், சம்பவ இடத்திற்கு வந்து, கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

இதையடுத்து ஆவடியில் இருந்து நிலைய அலுவலர் வீரராகவன் தலைமையில் 6 தீயணைப்பு படைவீரர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தனர். அவர்கள் ஆவடியை அடுத்த வெள்ளானூர் பகுதி வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு கிருஷ்ணா கால்வாயில் விழுந்த சிறுவர்கள் இருவரையும் தீவிரமாக தேடிச்சென்றனர்.

ஆனால் சிறுவர்கள் இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரம் ஆனதால் சிறுவர்கள் இருவரையும் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. தொடர்ந்து இன்று காலை தேடும் பணி தொடரும் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். ஒரே நேரத்தில் இரட்டை சகோதரர்களான சிறுவர்கள் இருவரும் நீரில் மூழ்கி மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story