144 தடை உத்தரவு எதிரொலி: சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவிப்பு - பஸ்சை முற்றுகையிட்டதால் பரபரப்பு


144 தடை உத்தரவு எதிரொலி: சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவிப்பு - பஸ்சை முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 March 2020 11:00 PM GMT (Updated: 25 March 2020 1:35 AM GMT)

144 தடை உத்தரவு எதிரொலியாக, சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பயணிகள் தவித்தனர். மேலும் பஸ்சை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், தமிழகத்தில் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் இரவு முதலே திண்டுக்கல்லில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்காக பயணிகள் கூட்டம் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் அலைமோதியது.

இதேபோல் சென்னையில் இருந்து திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரை செல்லும் பயணிகளும் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் பஸ் நிலையத்தில் குவிந்தனர். இதனால் திண்டுக்கல் பஸ் நிலையம் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மேலும் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் நுழையும் போதே அதில் ஏறுவதற்கு பயணிகள் முண்டியடித்தனர்.

தங்களின் உடைமைகளை பஸ்சுக்குள் தூக்கிப்போட்டும், சிறுவர்களை ஜன்னல் வழியாக உள்ளே அனுப்பியும் இடம் பிடித்த காட்சியை பார்க்க முடிந்தது. போதிய பஸ்கள் இயக்கப்படாததால், சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் பரிதவித்தனர்.

பின்னர் நேற்று காலையில் பயணிகள் கூட்டம் சற்று குறைந்தாலும், மதியம் 2 மணிக்கு மேல் பஸ் நிலையத்தில் மீண்டும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மாலை 6 மணிக்குள் தங்களது ஊர்களுக்கு சென்றுவிட வேண்டும் என்ற வேகத்தில் பயணிகள் முன்டியடித்துக்கொண்டு பஸ்களில் ஏறி இடம்பிடித்தனர்.

இந்த நிலையில் திண்டுக்கல்லில் இருந்து திருச்சி செல்வதற்காக காத்திருந்த பயணிகளுக்கு நீண்ட நேரமாக பஸ்கள் வரவில்லை. இதனால் திருச்சியில் இருந்து திண்டுக்கல் வந்த அரசு பஸ் ஒன்றை பயணிகள் திடீரென முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து கழக அதிகாரிகள், பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனையடுத்து சிறிது நேரத்தில் கூடுதலாக ஒரு பஸ் அங்கு வரவழைக்கப்பட்டது. இதையடுத்து சமாதானம் அடைந்த பயணிகள், அந்த பஸ்சில் ஏறி புறப்பட்டனர்.

இதற்கிடையே திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், நேற்று இரவு பஸ்நிலையத்துக்கு வந்தார். பின்னர் அங்கு கூடியிருந்த பயணிகளிடம் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும், அது பரவாமல் தடுக்க பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் பேசினார்.

Next Story