வெளிநாட்டில் இருந்து வந்த 2 ஆயிரம் பேரை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு


வெளிநாட்டில் இருந்து வந்த 2 ஆயிரம் பேரை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 25 March 2020 9:30 PM GMT (Updated: 25 March 2020 8:32 PM GMT)

வெளிநாட்டில் இருந்து மாவட்டத்திற்கு வந்த 2 ஆயிரம் பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை, 

காரைக்குடி அமராவதிபுதூரில் உள்ள 4-வது ராணுவ படைத்தள வளாகத்தில் கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை கலெக்டர் ஜெயகாந்தன் பார்வையிட்டார். அப்போது 4-வது ராணுவ படைத்தள காவல் கண்காணிப்பாளா் கிளாரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரின்ஸ், மருத்துவத்துறை இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 1-ந்தேதிக்கு பிறகு வெளிநாட்டிலிருந்து 2 ஆயிரம் பேர் வந்துள்ளனர். அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். மேலும் அவர்களின் வீடுகள் முன்பு ஸ்டிக்கர் ஒட்டி காண்காணிக்கப்படுகின்றனர்.

இதில், 11 பேரை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து 28 நாட்கள் கண்காணிக்கும் வகையில் மருத்துவக்குழுவினர் கண் காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பரவினால் உரிய சிகிச்சை வழங்கும் வகையில் காரைக்குடி அமராவதிபுதூர் 4-வது ராணுவ படைத்தள வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட 212 அடுக்கு மாடி கட்டிடம் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அமராவதிபுதூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் காரைக்குடி தலைமை மருத்துவமனை வளாகங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோய் சிகிச்சைக்கான வார்டுகளை கலெக்டர் பார்வையிட்டார்.

Next Story