ஊரடங்கு உத்தரவால் ராமேசுவரம் நகர், கோவில் பகுதி வெறிச்சோடியது


ஊரடங்கு உத்தரவால் ராமேசுவரம் நகர், கோவில் பகுதி வெறிச்சோடியது
x
தினத்தந்தி 25 March 2020 9:45 PM GMT (Updated: 25 March 2020 8:41 PM GMT)

ஊரடங்கு உத்தரவால்ராமேசுவரம் நகர்,கோவில்பகுதி மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடியது.

ராமேசுவரம்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசின் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் புண்ணிய தலமான ராமேசுவரம் கோவில் ரத வீதிகளின் சாலை, அக்னிதீர்த்த கடற்கரை, பஸ்நிலையம், கடற்கரை உள்ளிட்ட அனைத்து இடங்களும் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன.

அதுபோல் முக்கிய சந்திப்பு சாலையான திட்டக்குடி சந்திப்பு சாலை வழியாக கோவில், பஸ் நிலையம், ராமர்பாதம் மற்றும் தனுஷ்கோடி உள்ளிட்ட நகரின் எந்த இடங்களுக்கும் எந்தவொரு வாகனங்களும் செல்லாமல் இருக்கும் வகையில் சாலையின் நான்கு புறமும் தடுப்பு கம்பிகள் வைத்து போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வெளியே வர வேண்டாம் எனவும் மீறி வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்தனர். பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள் திறக்க அனுமதி உள்ளதால் ராமேசுவரம் மார்க்கெட் பகுதியில் காய்கறிகள் மற்றும் மீன்கள் வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளை தவிர மற்ற கடைகள் திறக் காமல் இருக்க கண்காணிக்கவும், மக்கள் கூட்டமாக நிற்பதை தடுக்கவும் தாசில்தார் அப்துல்ஜபார், போலீஸ் துணை சூப்பிண்ரடு மகேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் ராமேசுவரம் நகர் பகுதி முழுவதும் தீவிரமாக ரோந்து சுற்றி கண்காணித்து வந்தனர். இதேபோல் பாம்பன் ரோடு பாலத்திலும் வாகனம் மற்றும் பொது மக்கள் நடமாட்டம் இல்லாமலும் வெறிச்சோடி காணப்பட்டது.பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளிலும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

Next Story