மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தோப்புக்கரணம் போட வைத்த போலீசார்
தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு காரணமாக டி-பிளாக் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் தோப்புக்கரணம் போட வைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பனைக்குளம்,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்கள் அனைவரும் 21 நாட்கள் வீட்டில் இருக்க வேண்டும் என மக்கள் ஊரடங்கை பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்குமார் உத்தரவின்பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சாலைகள் அனைத்திலும் போலீசார் வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று டி-பிளாக் சாலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிகமானவர்கள் இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக சென்று கொண்டிருந்தனர். இதையடுத்து அந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் நிறுத்தி கண்டித்து தோப்புக்கரணம் போட வைத்து நீண்ட நேரத்திற்கு பிறகு எச்சரித்து அனுப்பிவைத்தனர். இதுதவிர பாரதிநகர், கலெக்டர் அலுவலக வளாகம் செல்லக்கூடிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு அந்த வழியாக வரக்கூடிய வாகனங்கள் அனைத்தையும் சோதனைக்கு பிறகு அனுப்பி வைத்தனர். இந்த ஆய்வின்போது மண்டபம் யூனியன் ஆணையாளர் சேவுகப்பெருமாள், மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் மருதுபாண்டியன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், ஊராட்சி துணை தலைவர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story