கொரோனாவுக்கு தமிழகத்தில் முதல் உயிரிழப்பு: பலியானவரின் குடும்பத்தினர் தீவிர கண்காணிப்பு - 100 பேரை தனிமைப்படுத்தி நடவடிக்கை


கொரோனாவுக்கு தமிழகத்தில் முதல் உயிரிழப்பு: பலியானவரின் குடும்பத்தினர் தீவிர கண்காணிப்பு - 100 பேரை தனிமைப்படுத்தி நடவடிக்கை
x
தினத்தந்தி 26 March 2020 4:45 AM IST (Updated: 26 March 2020 5:33 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு தமிழகத்தில் முதல் உயிரிழப்பாக மதுரையை சேர்ந்த கண்டிட காண்டிராக்டர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் என 100 பேரை தனிமைப்படுத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மதுரை, 

மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 54 வயதான கட்டிட காண்டிராக்டருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டது. உடனே அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகி்ச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் ஒரு வாரத்துக்கும் மேலாக சிகிச்சையில் இருந்தார்.

நோய் குணமாகாததால் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது சளி, ரத்தம் ஆகியவை பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து அவரை தனி வார்டில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது உடல் நிலை மோசமடைந்து கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். அதை தொடர்ந்து சில மணி நேரத்திலேயே நள்ளிரவில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவிற்கு முதல் உயிரிழப்பாக மதுரை கட்டிட காண்டிராக்டர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக டாக்டர்கள் கூறும் போது, அந்த காண்டிராக்டர் நீண்ட நாட்களாக நுரையீரல் நோய், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியதால் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டார்” என்று தெரிவித்தனர்.

அவரது உடல் ரசாயன கலவையால் பதப்படுத்தப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் இறுதி சடங்கு நடைபெற்று, மதுரை அண்ணாநகர் பகுதியில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்த நபரின் குடும்பத்தில் யாருக்கும் கொேரானா தொற்று வந்துவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறையினர் தற்போது தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அவர் வீட்டில் யாரெல்லாம் எத்தனை நாட்கள் தங்கி இருந்தனர், அவர் சந்தித்த நபர்கள், சென்று வந்த இடங்கள் ஆகியவை குறித்து விசாரணை நடத்தி தகவல்களை திரட்டி உள்ளனர்.

அந்த காண்டிராக்டர் அந்த பகுதியில் சந்தித்த நபர்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் என சுமார் 100-க்கும் ேமற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கொரோனா தொற்றுடன் இருந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த 2 பேருடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. அதன் மூலம் தான் கொரோனா தொற்று அவருக்கு ஏற்பட்டு, அவர் உயிர் இழந்ததாகவும் விசாரணையில் தெரியவருகிறது.

இது தவிர அவர் அந்த பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு யார்-யார் வந்தார்கள் என்பதை கண்டறியும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.

மேலும் அவர் வீடு அமைந்துள்ள பகுதியில் மாநகராட்சி துப்புரவு ஊழியர்களால் தூய்மைபடுத்தப்பட்டு, அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ளவர்கள் யாருக்கேனும் உடல்நிலை பாதிக்கப்பட்டால் உடனே அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

Next Story