கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு: போக்குவரத்து நிறுத்தம்-கடைகள் மூடல் - போலீசார் தீவிர கண்காணிப்பு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையொட்டி போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடைகளும் மூடப்பட்டன. மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காட்டு தீ போல பரவி வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு உத்தரவையொட்டி அரசு, தனியார் பஸ்கள் முழுமையாக ஓடவில்லை. அதே போல ஆட்டோக்களும், கார்களும் இயங்கவில்லை.
சாலைகளில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஒரு சிலரே செல்வதை காண முடிந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழக, கர்நாடக, ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது. இதனால் பிற மாநிலங்களில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் வாகனங்கள் வராமல் இருக்கவும், பக்கத்து மாவட்டங்களில் இருந்து வராமல் இருக்கவும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி மாநில எல்லைகளில் பர்கூர் அருகே உள்ள வரமலைகுண்டா, காளிக்கோவில், வேப்பனப்பள்ளி அருகே உள்ள நேரலகிரி, ஓசூர் அருகே உள்ள கக்கனூர், ஜூஜூவாடி உள்ளிட்ட 13 சோதனைச்சாவடிகளும், மாவட்ட எல்லையான சப்பாணிப்பட்டி, மஞ்சமேடு, அத்திமரத்துப்பள்ளம், தபால்மேடு, ராயக்கோட்டை உள்ளிட்ட 9 சோதனைச்சாவடிகளும் என மொத்தம் 22 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் பால் மற்றும் காய்கறி வாகனங்களுக்கு மட்டும், கிருமி நாசினி ஸ்பிரே அடித்து அனுமதித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திர, கர்நாடக மாநில எல்லையில் உள்ளதால் இந்த பகுதியில் ஆண்டுதோறும் தெலுங்கு வருட பிறப்பாக யுகாதி பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பிரச்சினை காரணத்தாலும், ஊரடங்கு உத்தரவு காரணத்தாலும் பண்டிகையை மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடவில்லை.
யுகாதி பண்டிகையையொட்டி நேற்று அதிகாலையில் காய்கறிகள், பழங்கள், பூக்களை விற்பனை செய்திட வியாபாரிகள் வந்திருந்தனர். ஆனால் வழக்கம் போல இந்த முறை வியாபாரம் நடைபெறவில்லை. டீக்கடைகள் மட்டும் ஆங்காங்கே திறந்திருந்தன. அதுவும் சிறிது நேரத்தில் மூடப்பட்டன. மாவட்டத்தில் பால் வினியோகம் இருந்தது. மளிகை, காய்கறி கடைகளும், இறைச்சி கடைகளும் திறந்திருந்தன.
மாவட்டத்தில் போலீசார் சாலைகளில் வந்து, ஒலிப்பெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்கள். அத்தியாவசிய தேவைகளை தவிர யாரும் வெளியே வர கூடாது என்றும், மோட்டார்சைக்கிள்கள், வாகனங்களில் யாரேனும் வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றம் எச்சசரித்தனர். கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. அதே போல கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவது வழக்கம். நேற்று வாகனங்கள் எதுவும் இன்றி சுங்கச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.
நகராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் இருசக்கர வாகனங்களில் சிலர் சென்று வந்ததால் 5 ரோட்டின் சாலைகள் அனைத்தையும் தடுப்பு கம்பிகள் (பேரி கார்டு) மூலமாக தடுப்புகளை போலீசார் ஏற்படுத்தினார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில இடங்களில் ஓட்டல்கள் திறந்திருந்தன. அங்கு பார்சல்கள் மட்டும் வழங்கப்பட்டன. மருந்து கடைகள் வழக்கம் போல இயங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் பொதுமக்கள் பலர் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சாலைகளில் சுற்றி வந்தனர். அவர்களை போலீசார் பிடித்து எச்சரித்தனர். மீண்டும் ஒரு முறை சாலைகளில் வாகனத்தை ஓட்டி செல்வதை பார்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர். மாவட்டம் முழுவதும் பல இடங்களில் இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் பலர் பொறுப்பை உணராமல் சாலைகளில் சென்றனர். அந்த வகையில் ஓசூர் சிப்காட்டில் தடை உத்தரவை மீறி ஒன்றாக சிலர் கூடி இருந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்தும் செல்லாததால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இன்று (வியாழக்கிழமை) முதல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்திலோ, 4 சக்கர வாகனத்திலோ யாரேனும் தேவையின்றி சுற்றினால் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
Related Tags :
Next Story