ஊரடங்கு உத்தரவால் மாவட்டம் முடங்கியது - பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருந்தனர்
கொரோனா வைரசின் தாக்கத்தை தொடர்ந்து வருகிற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம் வெறிச்சோடியது. பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருந்தனர்.
புதுக்கோட்டை,
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மேலும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரசில் இருந்து பொதுமக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. குறிப்பாக இந்த வைரஸ் காற்றின் மூலமும் ஒருவருக்கொருவர் பரவும் என்பதால், பொதுமக்கள் அதிக கூட்டம் உள்ள இடத்திற்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தன் சுத்தம் அவசியம் என்பதை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தியதால் கிராமங்களில் உள்ள கடைகளில் கூட வாடிக்கையாளர்கள் கை கழுவ சோப்பு, தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மஞ்சள் தண்ணீர் வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் அதிக கூட்டம் இருக்கும் இடங்களான திரையரங்குகள், வணிக வளாகம், பெரிய ஜவுளி கடைகள், நகைக்கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்தையும் வருகிற 31-ந் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் முக்கிய கோவில்களில் நடக்கும் திருவிழாக்கள் உள்ளிட்டவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதேபோல சுற்றுலாதலங்கள், பூங்காக்கள் மூடப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே உள்ளனர்.
இந்நிலையில் வருகிற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு (144 தடை) பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,600 போலீசார் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட எல்லைகளில் 10 சோதனை சாவடிகளும், மாவட்டத்தின் உட்புறங்களில் 38 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 4 சுங்கச்சாவடிகளிலும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அமைக்கப்பட்டு உள்ள சோதனைச் சாவடிகளில் போலீசாருடன், சுகாதார பணியாளர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
அதேபோல் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்களை சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித் துறையினருடன் இணைந்து போலீசாரும் கண்காணித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மாவட்டத்தில் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட, பல்வேறு வழக்குகளில் ஜாமீனில் வெளியே வந்தவர்கள், ரவுடிகள், மது பானங்களை பதுக்கி விற்பவர்கள் உள்ளிட்டோர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் தெரிவித்து உள்ளார்.
ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலையில் இருந்து முற்றிலும் பஸ்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது. இதனால் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் போக்குவரத்து கழக பணிமனையிலேயே நிறுத்தப்பட்டு உள்ளன. இதேபோல தனியார் லாரிகள், வேன்கள், ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள் போன்ற அனைத்து வாகனங்களும் இயக்கப்படவில்லை. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் சில இறைச்சி கடைகள், மருந்து கடைகள், காய்கறி, சிறிய மளிகை, பழக்கடைகள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையம் போன்றவை திறந்து இருந்தன. இதன் காரணமாக புதுக்கோட்டையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், பூ மார்க்கெட், உழவர் சந்தை, கீழராஜவீதி, மேலராஜவீதி, தெற்கு ராஜவீதி, வடக்கு ராஜவீதி, மீன்மார்க்கெட் போன்றவை நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் கீரனூர், இலுப்பூர், அன்னவாசல், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், பொன்னமராவதி, அரிமளம், திருமயம், வடகாடு, ஆதனக்கோட்டை, ஆலங்குடி, திருவரங்குளம், ஆவூர், விராலிமலை, கோட்டைப்பட்டினம், மணமேல்குடி, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, கீரமங்கலம், காரையூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. பஸ்கள் ஓட வில்லை. முக்கிய இடங்களில் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள் கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
அத்தியாவசிய தேவையான காய்கறிகள், பழங்கள், இறைச்சிகள் போன்றவை வாங்குவதற்காக வெளியே வந்த பொதுமக்களை ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அவர்களை நிறுத்தி எங்கே செல்கின்றீர்கள் என விசாரணை நடத்தினார்கள். மேலும் முக கவசம் அணியாமல் யாரும் வெளியே வரக்கூடாது என எச்சரித்து அனுப்பினர். இதேபோல சாலையில் சுற்றித்திரிந்த வாலிபர்களை போலீசார் விரட்டி அடித்தனர். புதுக்கோட்டை நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் நேற்று காலை புதுக்கோட்டை நகர பகுதிகள் மற்றும் கடைகளில் நேற்று முன்தினம் சேர்ந்த குப்பைகளை முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு குப்பைகளை சேகரித்து திருக்கட்டளை சாலையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொண்டு சேர்த்தனர். 144 தடை உத்தரவு உள்ள அனைத்து நாட்களிலும், துப்புரவு பணிகள் மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
புதுக்கோட்டை நகரில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, பஸ்கள், லாரிகள், ஆட்டோக்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் போன்றவை இயக்கப்படவில்லை. இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம், கீழராஜவீதி, அண்ணாசிலை உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப் பட்டது.
Related Tags :
Next Story