ஊரடங்கு உத்தரவை மீறி ரோட்டில் வாகனங்களில் சுற்றியவர்களுக்கு நூதன தண்டனை - போலீசார் நடவடிக்கை


ஊரடங்கு உத்தரவை மீறி ரோட்டில் வாகனங்களில் சுற்றியவர்களுக்கு நூதன தண்டனை - போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 26 March 2020 9:30 PM GMT (Updated: 26 March 2020 9:24 PM GMT)

ஊரடங்கு உத்தரவை மீறி ரோட்டில் வாகனங்களில் சுற்றியவர்களுக்கு போலீசார் நூதன தண்டனைகள் வழங்கினர்.

கடத்தூர், 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 24-ந் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகள் தவிர யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மத்திய அரசின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. எனினும் ஊரடங்கு உத்தரவை மீறி பலரும் வாகனங்களில் சுற்றி வருகிறார்கள். இதை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபியில் சிலர் ரோட்டில் வாகனங்களில் சுற்றினர். உடனே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது வாகனங்களில் வருகிறீர்களே என்று கேட்டு உள்ளனர். பின்னர் அவர்கள் அனைவரையும் 1 மீட்டர் இடைவெளியில் நிற்க வைத்தனர். அவர்களிடம், ‘ஊரடங்கு உத்தரவை மதிப்போம். கொரோனா நோய் ஒழிப்புக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் நாங்கள் அனைவரும் இனி வீட்டை விட்டு வெளியே வரமாட்டோம். அரசின் விதிமுறைகளை மதித்து நடப்போம்,’ என உறுதிமொழி எடுக்க வைத்து அனுப்பி வைத்தனர்.

முன்னதாக கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோர் ஊரடங்கு உத்தரவு முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என கோபி பகுதியில் ரோந்து சென்று பார்வையிட்டனர்.

இதேபோல் ஊரடங்கு உத்தரவை மீறியதுடன், குடிபோதையில் ஓட்டியதாக ஒருவர் மீதும், மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கார், 2 மோட்டார்சைக்கிள்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சத்தியமங்கலம் அருகே சிவியார்பாளையம் கிராமத்தில் இளைஞர்கள் 10 பேர் வந்தனர். அவர்களிடம் போலீசார் எங்கு செல்கிறீர்கள்? என்று விசாரித்தபோது ஆற்றில் குளிக்க செல்வதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்துக்காக போலீசார் 10 பேரையும் தோப்புக்கரணம் போட வைத்தனர்.

Next Story