சிவகங்கை, சிங்கம்புணரியில் காய்கறி மார்க்கெட்டாக மாறிய பஸ் நிலையங்கள்


சிவகங்கை, சிங்கம்புணரியில் காய்கறி மார்க்கெட்டாக மாறிய பஸ் நிலையங்கள்
x
தினத்தந்தி 28 March 2020 11:00 PM GMT (Updated: 28 March 2020 11:05 PM GMT)

சிவகங்கை, சிங்கம்புணரியில் உள்ள பஸ்நிலையங்கள் காய்கறி மார்க்கெட்டாக மாற்றப்பட்டன.

சிங்கம்புணரி, 

கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழக அரசு அனைத்து ஊர்களிலும் காய்கறி மார்க்கெட்டுகள், மளிகை கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்கும் என உத்தரவிட்டது. சிங்கம்புணரி பெரியகடைவீதி பகுதியில் காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள், மீன் மார்க்கெட் உள்பட பலதரப்பட்ட கடைகள் இருந்தன. இதனால் அந்த பகுதியில் தினமும் காலையில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டு வந்தது.

இதையறிந்து சிங்கம்புணரி தாசில்தார் பஞ்சவர்ணம் உத்தரவின்பேரில் தேர்வுநிலை பேரூராட்சி சார்பில் அதன் செயல் அலுவலர் முகமது ஜான் முன்னிலையில் காய்கறி கடைகள் அனைத்தும் சிங்கம்புணரி பஸ் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டது.

ஒவ்வொரு கடையும் 10 அடி தூரம் இடைவெளி அமைக்கப்பட்டு காய்கறி மார்க்கெட்டாக அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. அதேபோல பெரிய கடைவீதியில், பலசரக்கு கடைகளும், தினசரி சந்தை பகுதியில் மீன் மார்க்கெட்டும் செயல்பட்டது. மார்க்கெட், கடைகள் பிரித்து அமைக்கப்பட்டதால், பொதுமக்கள் தங்கள் தேவைக்கேற்ற பொருட்களை வாங்கிச் சென்றனர். இதனால் கூட்டம் கூடுவது தடுக்கப்பட்டது. சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட முயற்சி வெற்றி கிடைத்ததாக சமூக ஆர்வலர்கள் கருத்து கூறினர்.

சிவகங்கை நகரில் நேரு பஜார் பகுதியில் தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த இடம் மிகவும் குறுகலான பகுதியில் உள்ளது. இதில் தினமும் அதிக அளவில் பொதுமக்கள் வந்து காய்கறிகளை வாங்கி செல்வார்கள். தற்போது கொரோனா நோய் தொற்றை தவிர்க்க இடைவெளி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதனால் இந்த காய்கறி மார்க்கெட்டை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

இது தொடர்பாக சிவகங்கை நகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- கொரோனா நோய் தொற்றை தடுக்கும் விதமாக பொதுமக்கள் நெரிசலை குறைத்து போதிய இடைவெளியுடன் சுகாதாரமாக காய்கறிகள் வாங்க வசதியாக சிவகங்கை நேரு பஜாரில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் சிவகங்கை பஸ்நிலையத்திற்கு மாற்றம் செய்யப்படவுள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story