கொரோனா தடுப்பு நடவடிக்கை: திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் தற்காலிக மார்க்கெட் - கலெக்டர் ஆய்வு


கொரோனா தடுப்பு நடவடிக்கை: திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் தற்காலிக மார்க்கெட் - கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 30 March 2020 4:00 AM IST (Updated: 29 March 2020 11:52 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.

திருச்செந்தூர், 

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான மளிகை பொருட்கள், காய்கறிகள் வாங்குவதற்காக கடைகள், மற்றும் பெட்ரோல் பங்க் உள்ளிட்டவை மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

திருச்செந்தூர் பகுதியில் ஒரு சில மளிகை கடைகளும். தினசரி காய்கறி மார்க்கெட் ஆகியவையும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தியாகி பகத்சிங் பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் நேற்று காலை முதல் பஸ் நிலையத்துக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு உள்ளது. அங்கு கடைகளின் முன்பு பொதுமக்கள் இடைவெளி விட்டு நின்று பொருட்கள் வாங்குகும் வகையில் வட்டமிடப்பட்டு இருந்தது. அந்த வட்டத்துக்குள் நின்று பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி சென்றனர்.

நேற்று மாலையில் அந்த தற்காலிக மார்க்கெட்டுக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வந்து பார்வையிட்டார். அப்போது அங்கு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? என்றும், அப்பகுதியில் நடந்த சுகாதார பணிகளையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர் தனப்பிரியா, தாசில்தார் ஞானராஜ், மண்டல துணை தாசில்தார் கோபால், வருவாய் ஆய்வாளர் ராமச்சந்திரன், டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் கோபால், சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல் முருகன், சுகாதார கண்காணிப்பாளர் சின்னத்துரை உள்பட பலர் உடனிருந்தனர்.

காயல்பட்டினத்தில்...

காயல்பட்டினத்தில் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக அங்குள்ள கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் புதிய பஸ்நிலையத்தில் தற்காலிக காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கடைகளில் பொதுமக்கள் 3 மீட்டர் இடைவெளி விட்டு நின்று, காய்கறிகள் வாங்கி செல்லும் வகையில் கோடுகள் போடப்பட்டு உள்ளது. அந்த காய்கறி கடைகளை நேற்று கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) புஷ்பலதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து சாகுபுரம் தொழிற்சாலை சார்பில் டேங்கர் லாரி மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியையும் கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார். இதில் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை மூத்த உதவி தலைவர் சீனிவாசன், துணைபோலீஸ் சூப்பிரண்டு ராகவேந்திரரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story