நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பீடித்தொழிலாளர்கள் 4 லட்சம் பேர் தவிப்பு - கொரோனாவால் வேலையிழந்த பரிதாபம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரோனாவால் பீடித்தொழிலாளர்கள் 4 லட்சம் பேர் வேலையிழந்து தவித்து வருகிறார்கள்.
நெல்லை,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு வகையில் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொழில் நிறுவனங்கள், அன்றாட தொழில்கள் முடங்கி கிடப்பதால் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.
இதில் பீடி சுற்றும் தொழிலும் அடியோடு முடங்கி கிடக்கிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பீடித்தொழிலாளர்கள் உள்ளனர். இதில் அதிகமாக பெண்கள் மட்டுமே பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருசில ஆண்கள் மட்டும் இந்த வேலை செய்கின்றனர்.
இவர்களுக்கு பீடி தயாரிப்பு நிறுவனத்தில் வேலை வழங்கப்படுகிறது. பீடி சுற்றுவதற்கு தேவையான இலை, நூல் ஆகியவை வழங்குகின்றனர். பின்னர் தொழிலாளர்களால் சுற்றப்பட்ட பீடியை பெற்றுக் கொண்டு, குறிப்பிட்ட பீடிகள் சுற்றுவதற்கு என்று கூலி நிர்ணயம் செய்து, அந்த கூலியை வாரந்தோறும் வழங்குகிறார்கள். முன்பு சனிக்கிழமைதோறும் நேரடியாக வழங்கப்பட்டு வந்த கூலி தற்போது வங்கி கணக்கு மூலம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் பீடி சுற்றும் தொழில் அடியோடு முடங்கி விட்டது. பீடி தயாரிப்பு நிறுவனங்கள் திறக்கப்படவும் இல்லை. தொழிலாளர்களுக்கு பீடி சுற்றுவதற்கு இலை, நூல் வழங்கவில்லை. இதனால் அவரவர் வீடுகளில் இருந்து தனியாக பீடி சுற்றினாலும், அந்த வேலைக்கு தேவையான மூலப் பொருட்கள் கிடைக்கவில்லை.
இதனால் பீடித்தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகிறார்கள். இதன் காரணமாக ஊதியம் இன்றி அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை பொருட்கள் வாங்குவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். இதுதவிர கொரோனாவால் ஏற்பட்ட விலைவாசி உயர்வும் இவர்களை கடுமையாக பாதித்து உள்ளது. எனவே, தங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று பீடித்தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் மோகன் கூறியதாவது:-
நெல்லை, தென்காசி மாவட்டங்கள் பீடித்தொழிலாளர்கள் நிறைந்தது ஆகும். கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து உள்ளது. ஆனால் 4 லட்சம் பீடித்தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு எந்த ஒரு நலத்திட்டமும் அறிவிக்கவில்லை.
பீடித்தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.100 முதல் ரூ.250 வரை கிடைக்கும். தற்போது 21 நாட்கள் வேலை கிடைக்காமல் போனால் அது பீடித்தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கும்.
பீடித்தொழிலாளர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் வாங்கி இருக்கிறார்கள். பீடிக்கம்பெனிகள் நடத்தும் நிதி நிறுவனங்களிலும் கடன் பெற்று உள்ளனர். இந்த கடன் தவணை தொகையை செலுத்தவும் அவர்கள் சிரமப்படுவார்கள். எனவே, அந்த தவணை தொகையை 3 மாதங்களுக்கு ரத்து செய்ய வேண்டும். பீடி கம்பெனிகள் மூலம் தொழிலாளர்களுக்கு முன்பணம் வழங்க வேண்டும். அரசு சார்பிலும் வாரந்தோறும் ரூ.1,000 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story