அருப்புக்கோட்டை ஜவுளி வியாபாரிகள் மும்பையில் தவிப்பு


அருப்புக்கோட்டை ஜவுளி வியாபாரிகள் மும்பையில் தவிப்பு
x
தினத்தந்தி 30 March 2020 4:00 AM IST (Updated: 30 March 2020 2:28 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை ஜவுளி வியாபாரிகள் 106 பேர் சொந்த ஊருக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியை சேர்ந்தவர்கள் மும்பை பகுதிக்கு சென்று அங்கு தங்கியிருந்து ஜவுளி வியாபாரம் செய்வது வாடிக்கையாகும். அதேபோல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜவுளி வியாபாரம் செய்ய மும்பை சென்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சினையால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பந்தல்குடியை சேர்ந்த 106 பேர் சொந்த ஊருக்கு திரும்ப முடியவில்லை.

இதுகுறித்து அருப்புக்கோட்டை அம்மா ரத்ததான கழக தலைவர் ராம்பாண்டியன் விருதுநகர் கலெக்டர் கண்ணனிடம், ஜவுளி வியாபாரிகளை மீட்க கோரி மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஜவுளி வியாபாரிகள் சொந்த ஊருக்கு வரமுடியாமல் உள்ளனர். மும்பையில் அவர்கள் தங்கியுள்ள அறையை விட்டு வெளியே வரமுடியாமலும், போதிய சாப்பாடு, குடிநீர், அடிப்படை வசதியின்றி கஷ்டப்படுவதாக தகவல் வந்துள்ளது.

எனவே தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து மும்பை தாராவியில் சிக்கியுள்ள ஜவுளி வியாபாரிகள் சொந்த ஊருக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story