ராஜபாளையத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர் குடியிருந்த பகுதி தீவிர கண்காணிப்பு


ராஜபாளையத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர் குடியிருந்த பகுதி தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 30 March 2020 5:00 AM IST (Updated: 30 March 2020 5:12 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதியவரின் வீடு அமைந்துள்ள பகுதி தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

ராஜபாளையம், 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு ஆண்டாள்புரத்தை சேர்ந்த 60 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ராஜபாளையத்தில் அவர் வசிக்கும் வீடு மற்றும் குடியிருப்பு பகுதிகள், உறவினர்கள் வீடு அனைத்தும் தனிமைப் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளது. மேலும் அந்தப் பகுதியை சுற்றிலும் சுமார் 2 கிலோ மீட்டர் அளவில் கிருமி நாசினி தெளித்து அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன்படி ராஜபாளையம் 41 மற்றும் 42-வது வார்டு வடக்கு ஆண்டாள்புரம், ரமணாநகர், பொன்னகரம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் உள்ள அனைவருக்கும் சுகாதாரத்துறையினர் 200 பேர் கொண்ட குழுவினரால் காய்ச்சல், இருமல், சளி தொற்று உள்ளதா என பரிசோதித்து வருகின்றனர்.

இதுவரை முதியவருடன் தொடர்பில் இருந்த 70 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மாவட்ட சுகாதார இயக்குனர் ராம்கணேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர், தாசில்தார் ஆனந்தராஜ் மற்றும் நகர்நல அலுவலர் சரோஜா ஆகியோர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

Next Story