திருப்பூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா வைரஸ் மருத்துவ குழுவினருக்கு முழு உடற்கவசம் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்
திருப்பூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா வைரஸ் சிறப்பு வார்டில் பணியாற்றும் மருத்துவ குழுவினருக்கு முழு உடற்கவசம் தயார் நிலையில் உள்ளது என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து பல்வேறு துறைகளின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பான அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்றுகாலை நடைபெற்றது.
கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கலெக்டர் விஜயகார்த்திகேயன் முன்னிலைவகித்தார். துறை வாரியாக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 41 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு காவல்துறை அதிகாரிகள், மருத்துவக்குழுவினர் , வருவாய்த்துறையினர் ஒரு குழுவாக நியமித்து வெளிமாவட்டத்தில் இருந்து யார் வந்தாலும் முழுவதுமாக பரிசோதனை செய்யப்படுகிறார்கள். தேவைப்பட்டால் மட்டுமே அவர்கள் மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
உடுமலை அருகே அமராவதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு கேரளாவில் இருந்து வருபவர்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் அத்தியாவசிய தேவை என்றால் முழுமையாக பரிசோதனை செய்து அனுமதிக்கப்படுகிறார்கள். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகளில் 47 வாகனங்கள் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கிராமப்பகுதிகளில் ஒவ்வொரு ஊராட்சியிலும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். குடிநீர் முதல் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் அவர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் வீட்டில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
திருப்பூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அனைத்து அரசு மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைத்துள்ளோம். உடுமலையில் அரசு மருத்துவமனை உள்ளது. இதுதவிர உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 100 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் 150 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார் படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 86 வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது.
சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவுக்கு வசதியாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முழு உடற்கவசம் ஏற்கனவே 150 தயாராக இருக்கிறது. கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வாங்கி வைக்கப்பட்டு இருந்த 200 முழு உடற்கவசம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு 150-ம், உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு 50-ம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர கோவை மாவட்டத்துக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 100 முழு உடற்கவசம் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் மருத்துவத்துறை சார்பில் ஒவ்வொரு ஊராட்சியாக சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் எதற்கும் பயப்பட வேண்டாம். பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுடன் யாரும் சிகிச்சையில் இல்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மீன்கடை, இறைச்சிக்கடை, கோழிக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதை முறைப்படுத்தும் வகையில் அந்தந்த கடை உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் பேசி மாநகராட்சி பகுதியில் 4 இடங்களை தேர்வு செய்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.
அந்த இடங்களில் மீன்கடை, இறைச்சிக்கடை, கோழிக்கடைகள் செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. நகர பகுதிகளிலும் பெரிய இடங்களில் கடைகள் அமைத்து கூட்ட நெரிசல் இல்லாமல் இறைச்சி, மீன் பாதுகாப்புடன் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநகர், புறநகர் பகுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. உத்தரவை மீறி வருபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தேவையற்ற பயணத்தை மக்கள் தவிர்க்க வேண்டும். திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் முகக்கவசம் தயாரித்து தமிழகம் முழுவதும் தட்டுப்பாடு இன்றி வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கரைப்புதூர் நடராஜன்(பல்லடம்), திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், போலீஸ் துணை கமிஷனர்கள் பத்ரி நாராயணன், பிரபாகரன், மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சாகுல் அமீது (பொது), பாலசுப்பிரமணியன்(ஊராட்சிகள்), திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் வள்ளி, சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி, துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story