பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை மருத்துவமனையில் சேர்த்த போலீசார் - பொதுமக்கள் பாராட்டு


பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை மருத்துவமனையில் சேர்த்த போலீசார் - பொதுமக்கள் பாராட்டு
x
தினத்தந்தி 30 March 2020 11:00 PM GMT (Updated: 30 March 2020 9:16 PM GMT)

திருப்பூர் வீரபாண்டி பகுதியில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை மருத்துவமனைக்கு போலீசார் தங்கள் வாகனத்தில் கொண்டு சேர்த்தனர். போலீசாரின் இந்த மனிதாபிமான செயலை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

வீரபாண்டி, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு போலீசார் உதவிய சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

அது பற்றிய விவரம் வருமாறு:-

திருப்பூர் வீரபாண்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 34). இவர் எவர்சில்வர் பாத்திரம் தயாரிக்கும் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மகேஸ்வரி (28) நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று அவருக்கு பிரசவ வலி அதிகமானதால் வலியால் துடித்தார். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் என்ன செய்வது என தெரியாமல் மகேஸ்வரியின் தாயார் தவித்தார்.

எனவே அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் உதவி கேட்டனர். இதனையடுத்து போலீசார் 108 ஆம்புலன்சை வரவழைத்தனர். ஆனால் ஒரு மணி நேரமாகியும் 108 ஆம்புலன்ஸ் வர தாமதமான நிலையில் அங்கு வந்த வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர் கலாவதி மற்றும் போலீசார் உதவியுடன் தங்களது வாகனத்தில் மகேஷ்வரியையும், அவரது தாயாரையும் அழைத்து சென்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு மகேஸ்வரிக்கு அறுவை சிகிச்சை மூலமாக அழகான ஆண் குழந்தை பிறந்தது.

ஊரடங்கு தடை உத்தரவு காலத்தில் வெளியே வருபவர்களை அடிக்க மட்டும் அல்ல அவர்களின் உயிரை காக்கவும் தெரியும் என்பதை போலீசார் நிரூபித்துள்ளனர். போலீசாரின் இந்த மனிதாபிமான செயல் அனைத்து தரப்பினரிடையே பாராட்டை பெற்றது.

Next Story