திருப்பூரில் புதிய முயற்சி: காய்கறி சந்தைக்குள் பொதுமக்கள் செல்ல கிருமிநாசினி சுரங்கம் - மாவட்ட நிர்வாகம் அமைத்தது


திருப்பூரில் புதிய முயற்சி: காய்கறி சந்தைக்குள் பொதுமக்கள் செல்ல கிருமிநாசினி சுரங்கம் - மாவட்ட நிர்வாகம் அமைத்தது
x
தினத்தந்தி 2 April 2020 4:00 AM IST (Updated: 2 April 2020 2:06 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் புதிய முயற்சியாக காய்கறி சந்தைக்குள் செல்லும் பொதுமக்கள் மீது நவீன கருவி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள காய்கறி சந்தைக்கு மக்கள் தினமும் வந்து செல்கிறார்கள். காலை நேரம் மளிகை கடைக்காரர்கள், சிறு வியாபாரிகள் இந்த சந்தைக்கு வந்து செல்கிறார்கள். பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியான இங்கு வருபவர்கள் கைகளை கழுவும் வகையில் சோப்பு மற்றும் தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பொதுமக்கள் மீது நவீன கருவி மூலமாக ஸ்பிரே முறையில் தெளிக்கும் வகையில் கிருமிநாசினி சுரங்கம் முதன்முறையாக தென்னம்பாளையம் சந்தையின் நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம், யங் இந்தியன் அமைப்பு, மாவட்ட தொழில் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் இந்த கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை வழியாக பொதுமக்கள் 3 முதல் 5 நொடிகளில் கடந்து செல்ல வேண்டும். அப்போது கிருமிநாசினி அவர்கள் மீது தானாகவே தெளிக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கருவியை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று காலை தொடங்கி வைத்து கிருமிநாசினி சுரங்கம் வழியாக சென்று வந்தார். இதில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், மாநகர் நல அதிகாரி பூபதி மற்றும் யங் இந்தியன் அமைப்பினர், மாவட்ட தொழில் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து கலெக்டர் விஜயகார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பூரில் முதன்முறையாக கிருமிநாசினி சுரங்க பாதை உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தைக்கு செல்வதற்கு முன்பு தனது கைகளை சோப்பு போட்டு கழுவிவிட்டு அதன்பிறகு இந்த கிருமிநாசினி சுரங்க பாதை வழியாக 3 முதல் 5 நொடிகளுக்குள் செல்லும்போது அவர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. இதில் 1 பி.பி.எம். அளவில் சோடியம் கைப்போ குளோரைடு பயன்படுத்தப்படுகிறது. குடிநீரில் கலக்கும் அளவை விட இது குறைவு தான்.

இதனால் சருமத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த கிருமிநாசினி சுரங்க பாதை அமைக்க ரூ.80 ஆயிரம் செலவாகிறது. அனைவரின் ஒத்துழைப்புடன் இது அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் மற்ற பகுதிகளிலும் இவ்வாறு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக இதுபோன்ற சுரங்க பாதை வழியாக வாகனத்தில் கடக்கும் போது கிருமிநாசினி தெளிக்கும் வகையில் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.                                                                                            

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 1,312 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அனைவரையும் அடையாளம் கண்டுவிட்டோம். மாநகரில் 9 பேரும், ஊரக பகுதியில் 30 பேரும் என மொத்தம் 39 பேர் உள்ளனர். இது தவிர ஒரு சிலர் டெல்லியிலேயே இருக்கிறார்கள். 39 பேருக்கும் கொரோனா தொற்று அறிகுறி இதுவரை இல்லை. இருப்பினும் தினமும் அவர்களின் மருத்துவ அறிக்கை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story