ராமேசுவரம் நகராட்சி பகுதியில் தூய்மை பணிகளை அதிகாரிகள் ஆய்வு


ராமேசுவரம் நகராட்சி பகுதியில் தூய்மை பணிகளை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 1 April 2020 9:45 PM GMT (Updated: 1 April 2020 11:36 PM GMT)

ராமேசுவரம் நகராட்சி பகுதியில் தூய்மை பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ராமேசுவரம், 

கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு காரணமாக பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் பாதிக்கப்படாதவாறு கலெக்டர் வீரராகவராவ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் ராமேசுவரத்தில் அரசு ஆஸ்பத்திரி, பஸ் நிலையம், கடைத்தெரு, திட்டக்குடி உள்பட நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டு பகுதிகளிலும் தீயணைப்பு துறை வாகனம் மற்றும் நகராட்சி வாகனங்கள் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

பஸ் நிலையத்தில் தற்காலிக கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் நகராட்சி சார்பில் கட்டங்கள் போடப்பட்டுள்ளது. நகர் முழுவதும் தூய்மை பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை நகராட்சி ஆணையாளர் ராமர் தலைமையில் பொறியாளர் சக்திவேல், சுகாதார அதிகாரி முத்துக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது ஒலி பெருக்கி மூலம் அரசின் உத்தரவுகளை கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதுகுறித்து ஆணையாளர் ராமர் கூறும்போது, ராமேசுவரத்தில் உள்ள ஆதரவற்ற 120 பேருக்கு பஸ் நிலையத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் இருந்து 3 வேளையும் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரசை தடுப்பதற்கு அதிகாரிகள் எவ்வளவு முயற்சி மேற்கொண்டாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். எனவே பொதுமக்கள் அரசின் உத்தரவை கடைபிடித்து வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று தெரிவித்தார். இதேபோல நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தூய்மை பணிகளை தாசில்தார் அப்துல் ஜப்பார், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் ஆகியோர் பார்வையிட்டு வருகின்றனர்.

Next Story