வேளாண்மைத்துறை சார்பில் திருப்பூரில் நடமாடும் காய்கறி விற்பனை சேவை; குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு


வேளாண்மைத்துறை சார்பில் திருப்பூரில் நடமாடும் காய்கறி விற்பனை சேவை; குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 3 April 2020 4:15 AM IST (Updated: 3 April 2020 2:10 AM IST)
t-max-icont-min-icon

வேளாண்மைத்துறை சார்பில் திருப்பூரில் நடமாடும் காய்கறி விற்பனை சேவை தொடங்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் மக்களுக்கு காய்கறி கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

திருப்பூர்,

வேளாண்மைத்துறை சார்பில் திருப்பூரில் நடமாடும் காய்கறி விற்பனை சேவை புதிதாக நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்றது. கலெக்டர் விஜயகார்த்திகேயன் இந்த சேவையை தொடங்கிவைத்தார். மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று குறைந்த விலையில் காய்கறி கிடைக்கும் வகையில் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் குழுக்களின் சார்பில் 10 வாகனங்களில் தினமும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காய்கறி விற்பனை செய்ய உள்ளனர்.

இதில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் மனோகரன், திருப்பூர் தெற்கு தாசில்தார் சுந்தரம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது-

வேளாண்மைத்துறை சார்பில் 10 வாகனங்கள் மூலமாக மக்கள் இருக்கும் பகுதியில் காய்கறி விற்பனை செய்ய உள்ளனர். காய்கறிகளை குறைந்த விலையில் சந்தையில் இருந்து வாங்கி மக்களிடம் சென்று சேரும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூ.30, ரூ.50, ரூ.100 என பிரித்து காய்கறிகளை விற்பனை செய்கிறார்கள். கீரை, தக்காளி, சுரைக்காய், வெண்டைக்காய், தேங்காய் சேர்த்து ரூ.30-க்கு விற்கிறார்கள். இதுபோல் கூடுதல் காய்கறிகளுக்கு அதற்கேற்ப விலை வைத்து விற்கிறார்கள். இதன் மூலமாக பொதுமக்கள் சந்தைக்கு வருவது குறையும். அதே வேளையில் மக்கள் இருக்கும் பகுதிக்கே குறைந்த விலையில் காய்கறி கிடைக்கும். ஆன்லைன் மூலமாக காய்கறி விற்பனை செய்யும் திட்டமும் உள்ளது.

ரேஷன் கடைகளில் இன்று(நேற்று) முதல் நிவாரண உதவித்தொகை, அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. அனைவருக்கும் டோக்கன் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு 8 முதல் 10 பேர் ரேஷன் கடைக்கு வந்து பொருட்களை வாங்கி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைக்கு முன்பு 10 வட்டங்கள் வரையப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்தில் 10 பேர் கடைக்கு வந்து அந்த வட்டத்துக்குள் நின்று வரிசையாக பொருட்களை வாங்கி செல்ல வேண்டும். அதன்படி நாளொன்றுக்கு 100 பேருக்கு வழங்கலாம் என்று எதிர்பார்க்கிறோம். 10 நாட்களுக்குள் அனைவருக்கும் கொடுக்க முடியும். காவல்துறைக்கும் இதுதொடர்பாக தெரிவித்துள்ளோம். பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இறைச்சி கடைகளில் ஏற்கனவே 250 கிராம், 500 கிராம், 1 கிலோ எடையில் இறைச்சியை வெட்டி தயாராக வைத்திருந்தால் மக்கள் கூட்டம் கூடாமல் வந்தவுடன் வாங்கி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக விலைக்கு இறைச்சி விற்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும். நாளை(இன்று) முதல் சோதனை முறையில் இதை செயல்படுத்த உள்ளோம். இதனால் வருகிற ஞாயிற்றுக்கிழமையன்று இறைச்சி, மீன் கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story