கொரோனா பயத்தால் போராட்டம் எதிரொலி: மேலூர் சிறை கைதிகள் மத்திய சிறைக்கு மாற்றம்


கொரோனா பயத்தால் போராட்டம் எதிரொலி: மேலூர் சிறை கைதிகள் மத்திய சிறைக்கு மாற்றம்
x
தினத்தந்தி 3 April 2020 10:15 PM GMT (Updated: 4 April 2020 12:16 AM GMT)

மேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் கொரோனா பயத்தால் போராட்டம் நடத்தியதால் அவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

மேலூர்,

மேலூரில் மாஜிஸ்திரேட் கோர்ட்டு பின் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் 1918-ம் ஆண்டு கட்டப்பட்ட கிளை சிறைச்சாலை உள்ளது. இங்கு அனைத்து கைதிகளும் அடைக்கப்பட்டு வந்தனர். அதன் பிறகு 18 முதல் 21 வயது வரை உள்ள கைதிகள் அடைக்கப்படும் பாஸ்டர் பள்ளி எனப்படும் சிறைச்சாலையாக செயல்பட்டு வந்தது.

இங்கு மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் போலீசாரால் கைது செய்யப்பட்ட 21 வயதுக்கு உட்பட்ட 25 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த மார்ச் 28-ந்தேதி கைதிகள் அனைவரும் மேலூரில் கொரோனா பயம் இருப்பதாக கூறி மதுரை சிறைக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டம் செய்தனர். அந்த நேரத்தில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்த 2 கைதிகள் சிறையிலிருந்து வெளியே தப்பினர். சிறிது நேரத்தில் அவர்கள் இருவரையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

இது குறித்து சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளா விசாரணை நடத்தினார். இதையடுத்து மேலூர் சிறையில் உள்ள கைதிகளை மதுரை மத்திய சிறைச்சாலைக்கு மாற்றம் செய்ய அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று மாலை மேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளி சிறைச்சாலையில் இருந்த அனைத்து கைதிகளும் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

இதுவரை 21 வயதுக்குட்பட்ட கைதிகள் மட்டுமே அடைக்கப்பட்டிருந்த மேலூர் சிறைச்சாலையில் இனி மேல் 21 வயதுக்கு மேற்பட்ட கைதிகளும் அடைக்கப்படுவார்கள் என போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Next Story