திருப்பூரில் வீட்டில் பணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது ரூ.2 லட்சம் பறிமுதல்; 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
திருப்பூரில் வீட்டில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் பணமும் 3 மோட்டார்சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் போயம்பாளையத்தை அடுத்த பழனிசாமி நகரில் இசக்கிமுத்து என்பவர் வீட்டில் வைத்து ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டை சுற்றி வளைத்தனர்.
அப்போது போலீசாரை கண்டதும் சூதாட்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றது. ஆனால் போலீசார் அனைவரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
இதில் அவர்கள் போயம்பாளையம், பிச்சம்பாளையம், கணக்கம்பாளையம், ஆத்துப்பாளையம், பாண்டியன்நகர், அண்ணாநகர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 36), கனகராஜ் (55), தனசேகர் (44), சாந்தகுமார் (50), விஜயகுமார் (35), முருகன் (45), ரமேஷ் (43), ரமேஷ்குமார் (32), குமார் (31), சதீஸ் (27), சரவணன் (34), வீரபிரபு (30), செந்தில்குமார் (40), ரவி (40), வீரபாண்டி (32), செந்தில்குமார் (50) உள்ளிட்ட 16 பேர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 16 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவது தடுக்கப்பட்டு வரும் நிலையில் திருப்பூர் போயம்பாளையத்தில் வீட்டில் 16 பேர் ஒரே இடத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story