கொரோனா குறிப்பிட்ட ரத்த பிரிவு கொண்டவர்களைத்தான் தாக்குமா? - மதுரை மருத்துவ நிபுணர் விளக்கம்


கொரோனா குறிப்பிட்ட ரத்த பிரிவு கொண்டவர்களைத்தான் தாக்குமா? - மதுரை மருத்துவ நிபுணர் விளக்கம்
x
தினத்தந்தி 8 April 2020 9:30 PM GMT (Updated: 8 April 2020 9:25 PM GMT)

கொரோனா குறிப்பிட்ட ரத்த பிரிவை கொண்டவர்களை மட்டும்தான் தாக்குமா? என்பது குறித்து மதுரை மருத்துவ நிபுணர் விளக்கம் அளித்தார்.

மதுரை, 

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 24 பேர், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோல் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் மதுரை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குறிப்பிட்ட சில ரத்த வகையை கொண்டவர்களையே கொரோனா தாக்குவதாக தகவல்கள், வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கொரோனா தடுப்பு பணிகளுக்கான மாவட்ட அலுவலர் டாக்டர் மருதுபாண்டி கூறியதாவது:-

கொரோனா நோயாளிகளுக்கும், இந்த நோய் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்டவர்களுக்கும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கான சிகிச்சைக்கு அதிக அளவு ரத்தம் தேவைப்பட வாய்ப்பில்லை.

ஒவ்வொரு நோயாளியின் உடல்நிலை, நோய் பாதிப்பை பொறுத்து ரத்தம் செலுத்த வேண்டியதிருக்கும். அப்படி ரத்தம் தேவைப்பட்டால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் ரத்த வங்கியின் மூலம் தேவையான அளவு ரத்தம் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுவிடும்.

கொரோனா என்பது ஒரு பொதுவான நோய். அந்த நோய் எல்லா வகை ரத்தத்தை கொண்டவர்களையும் தாக்க வாய்ப்பிருக்கிறது. குறிப்பிட்ட ரத்த வகை கொண்டவர்களை மட்டும் பாதிக்கும் என கூறுவது சாத்தியமில்லாத ஒன்று. அதற்கு அதிகாரபூர்வ தகவல்களும் இல்லை. மேலும் இதுதொடர்பாக ஆய்வு நடத்தி அதன் பின்னரே, எந்த ரத்த வகையை அதிகம் பாதிக்கிறது என்பதை உறுதிபடக் கூற முடியும். மதுரையை பொறுத்தமட்டில் கொரோனா அறிகுறிகளுடன் வரும் நபர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. முற்றிலும் குறைந்து விட்டது என்று கூற முடியாது. மக்கள் சமூக இடைவெளி, தன்சுத்தம் ஆகியவற்றை கடைபிடிப்பதன் மூலமே இந்த நோயில் இருந்து முழுவதுமாக தப்பிக்க முடியும். எனவே ஊரடங்கை மக்கள் அனைவரும் சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story