பொங்கலூர், சேவூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை; 4,600 வாழைகள் முறிந்து விழுந்தன


பொங்கலூர், சேவூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை; 4,600 வாழைகள் முறிந்து விழுந்தன
x
தினத்தந்தி 10 April 2020 4:30 AM IST (Updated: 10 April 2020 3:59 AM IST)
t-max-icont-min-icon

பொங்கலூர் மற்றும் சேவூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் 4,600 வாழைகள் முறிந்து விழுந்தன.

பொங்கலூர், 

பொங்கலூர் சுற்றுவட்டார பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் தென்னை மற்றும் காய்கறி, வாழை சாகுபடி நடைபெறுகிறது. இந்த நிலையில் தற்போது கொரோனா தாக்குதல் காரணமாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. எனவே விவசாய பொருட்கள் கொண்டு சென்று விற்பனை செய்வதில் சில சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. ஆனாலும் விவசாயிகள் விளைவித்த பொருட்களை நஷ்டம் ஏற்படாதவாறு பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பொங்கலூர் பகுதியில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கருமேகம் திரண்டது. அப்போது திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால் சிறிய மரங்கள் மற்றும் வாழை மரங்கள் முறிந்து கீழே சாய்ந்து விழுந்தன. பொங்கலூரை அடுத்த டி.ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரது தோட்டத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்தது. அதுபோல் காட்டூர் அருகே உள்ள திருமலைநாயக்கன்பாளையத்தை சேர்ந்த லோகநாதன் என்பவரது தோட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நேந்திரன் வாழை 600-க்கும் மேல் முறிந்து கீழே சாய்ந்தது. தொங்குட்டிபாளையம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 2 ஆயிரத்து 500 வாழை மரங்கள் முறிந்து விழுந்தது. அதன்படி பொங்கலூர் பகுதியில் மட்டும் 3,600 வாழைகள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் சேவூர், பாப்பாங்குளம், போத்தம்பாளையம், தண்டுக்காரன் பாளையம், தத்தனூர், புலிப்பார் உள்ளிட்ட பல பகுதிகளில் பயிரிட்டுள்ள 1000-வாழை மரங்கள் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் முறிந்து சேதம் அடைந்தன. இது குறித்து விவசாயிகள் கூறும்போது “ வாழை ஒன்றுக்கு ரூ.200 வரை செலவு ஆகிறது. இந்நிலையில் வாழைமரம் குழை தள்ளி அறுவடைக்கு தயாராக இருக்கும் போது பலத்த காற்றால் சேதமடைந்துள்ளது. இதனால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே உரிய இழப்பீடு வழங்க வேண்டும்“ என்றனர். இந்த நிலையில் நேற்று மாலையில் திருப்பூரில் லேசான மழை பெய்தது.

Next Story