பேரையூர் அருகே டாஸ்மாக் மதுவுடன் கலப்படம் செய்து புதுவித மதுபானம் தயாரிப்பு - மேற்பார்வையாளர் உள்பட 4 பேர் கைது


பேரையூர் அருகே டாஸ்மாக் மதுவுடன் கலப்படம் செய்து புதுவித மதுபானம் தயாரிப்பு - மேற்பார்வையாளர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 11 April 2020 4:45 AM IST (Updated: 11 April 2020 3:57 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடை மதுவுடன் வேறு பொருட்களை கலப்படம் செய்து புதுவித மதுபானம் தயாரித்தது தொடர்பாக டாஸ்மாக் மேற்பார்வையாளர், விற்பனையாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பேரையூர், 

ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக ‘குடி’மகன்களுக்கு மது கிடைக்காததால் அவர்கள் திண்டாடி வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய, டாஸ்மாக் கடைகளை உடைத்து மதுபாட்டில்களை திருடும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதற்கு அங்கு வேலைபார்க்கும் ஊழியர்கள் சிலர் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள தும்மநாயக்கன்பட்டியில் டாஸ்மாக் கடை மதுவுடன் போதை பொருட்களை கலந்து புதிவித மதுபானமே தயார் செய்துள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-

பேரையூர் அருகே உள்ள தும்மநாயக்கன்பட்டி பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தோட்டம் ஒன்றில் சிலர் கூட்டமாக நின்றிருப்பதை பார்த்தனர்.

இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் 3 பேரை சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள், சிலைமலைபட்டி டாஸ்மாக் கடை விற்பனையாளர் ஆனந்தபாபு(வயது 32) மற்றும் நரசிங்காபுரத்தை சேர்ந்த சக்திவேல்(48), லட்சுமிபுரத்தை சேர்ந்த சிவபெருமாள் என தெரியவந்தது.

அவர்கள் நின்றிருந்த இடத்தில் ஏராளமான மதுபாட்டில்கள் காலியாக கிடந்தன. அருகில் ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் மதுபானம் நிரப்பப்பட்டு இருந்தது. இதையடுத்து பிடிபட்ட 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் டாஸ்மாக் மதுபானத்துடன், கூடுதல் போதைக்காக வேறு சில பொருட்களை கலப்படம் செய்து புதுவித மதுபானம் தயார் செய்து டிரம்மில் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மேற்கண்ட 3 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு கீழப்பட்டி டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் செல்வம் மதுபாட்டில்களை திருட்டுத்தனமாக மொத்தமாக கொடுத்ததும் தெரியவந்ததால், செல்வமும் கைது செய்யப்பட்டார். இதே போல் டாஸ்மாக் கடை விற்பனையாளர் ஆனந்தபாபுவும் தன் பங்குக்கு மதுபானங்களை கொண்டு வந்ததாக தெரியவருகிறது.

இதைதொடர்ந்து கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் தயார் செய்து வைத்திருந்த மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story