கொரோனா சிகிச்சைக்காக 184 படுக்கைகளுடன் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி சிறப்பு மருத்துவமனையாக மாற்றம்


கொரோனா சிகிச்சைக்காக 184 படுக்கைகளுடன் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி சிறப்பு மருத்துவமனையாக மாற்றம்
x
தினத்தந்தி 12 April 2020 3:00 AM IST (Updated: 11 April 2020 11:08 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா சிகிச்சைக்காக 184 படுக்கை வசதியுடன் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி சிறப்பு மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு, 

தமிழகத்தில் சென்னை, அதையொட்டிய காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக, கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாவட்டம் ஈரோடு ஆகும். தாய்லாந்து நாட்டில் இருந்து வந்தவர்களுக்கு முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பின்னர் அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டார்கள். அவர்களை தொடர்ந்து நெருங்கி பழகியவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் 60 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனாவுக்கான சிறப்பு ஆஸ்பத்திரியாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தது. இதுதவிர ஈரோடு, கோபி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு ஆஸ்பத்திரிகள், சில தனியார் ஆஸ்பத்திரி, ஒரு பள்ளிக்கூட வளாகம் என்று மேலும் 74 படுக்கை வசதியுடன் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.

இந்தநிலையில் ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரி கொரோனா சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவமனையாக மாறி வருகிறது. இதற்காக இங்கு 184 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன. இதில் 170 படுக்கைகள் கொண்ட வார்டுகள் நேற்றே தயாராகி விட்டன. ஏற்கனவே இங்கு 30 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு ஒன்றும், 3 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு கண்காணிப்பு வார்டு ஒன்றும் இயங்கி வருகிறது. இங்கு நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில், மொத்தம் 6 பேர் கொரோனா வார்டில் இருக்கிறார்கள்.

ஆனால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி கொரோனா ஆஸ்பத்திரியாக மாற்றும் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. இதை முன்னிட்டு இங்கு பல்வேறு வார்டுகளிலும் இருந்த ஆண், பெண் நோயாளிகள் அனைவரும் கொரோனா வார்டுக்கு தொடர்பு இல்லாத பகுதியில் உள்ள ஒரே வார்டுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். பிரசவ வார்டும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா வார்டில் பணியாற்ற டாக்டர்கள், செவிலியர்கள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஷிப்ட் அடிப்படையில் பணி வழங்கப்பட்டு இருக்கிறது.

பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 300 படுக்கைகளில் 100-க்கும் குறைவானவர்களே சிகிச்சையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஆங்காங்கே அரசு ஆஸ்பத்திரிகளிலும் வார்டுகள் அமைக்கப்பட்டு, பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் மட்டுமே பெருந்துறை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தனர்.

ஆனால், தற்போது ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வேகமாக கொரோனா ஆஸ்பத்திரியாக மாற்றப்படுவது பொதுமக்களுக்கு எச்சரிக்கையாகும். இன்னும் கொரோனா பரவல் அதிகமானால் சமாளிக்க வசதியாக அதிகாரிகள் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி இருக்கிறார்கள். எனவே தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது. இதை எச்சரிக்கையாக எடுத்து பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.

காய்ச்சல், சளி இருந்தால் தாங்களாக முன்வந்து பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வாங்கிக்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தாங்களாக முன்வந்து தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அரசின் கண்காணிப்பில் இருந்து தப்பி விட்டால், அது தங்கள் மூலம் வேறு நபர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி விடும். எனவே சமுதாயத்தின் மீது அன்பு கொண்டு தங்களை தாங்களே பாதுகாப்பதன் மூலம், தங்களின் மூலம் மற்றவர்களுக்கு நோய்த்தொற்று பரவி விடாமல் இருக்கவும் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story