வீடியோ கால் மூலம் கொரோனா நிவாரண பணிகளை யூனியன் தலைவரிடம் கேட்டறிந்த மு.க.ஸ்டாலின்
கொரோனா நிவாரண பணிகள் குறித்து மண்டபம் யூனியன் தலைவரிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ காலில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.
பனைக்குளம்,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகளிடம் கொரோனா பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஊரடங்கு உத்தரவால் வேலையிழந்து வருமானமின்றி தவிக்கும் ஏழை எளிய மக்கள், கூலி தொழிலாளர்கள் போன்றோருக்கு அரிசி, மளிகை பொருட்களை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து தி.மு.க.வினர் கிராமம் கிராமமாக சென்று உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மண்டபம் யூனியன் தலைவர் அழகன்குளத்தை சேர்ந்த சுப்புலட்சுமி ஜீவானந்தத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செல்போனில் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து மாவட்டம் மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள மக்கள் நலமாக உள்ளனரா, உங்கள் பகுதியில் கொரோனா பாதிப்பு யாருக்கேனும் உள்ளதா, தடுப்பு பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது, மக்களை சந்தித்து உதவிகளை செய்து வருகிறீர்களா, தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள், நிவாரணப் பணிகள் நடக்கிறதா என்பது குறித்து கேட்டறிந்தார்.
இதற்கு பதில் அளித்த யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், மண்டபம் யூனியன் பகுதியில் கொரோனா நோய் பாதிப்பு யாருக்கும் இதுவரை இல்லை. வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். யூனியனுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்த குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்து வருகின்றனர் என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து பாதுகாப்பாக இருக்கும்படியும், கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்யவும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
Related Tags :
Next Story