மதுரையில் போலீசிடம் சிக்கிய கணவரை மீட்க நடந்தே வந்த கர்ப்பிணி - சமூகவலைத்தளங்களில் பாராட்டு


மதுரையில் போலீசிடம் சிக்கிய கணவரை மீட்க நடந்தே வந்த கர்ப்பிணி - சமூகவலைத்தளங்களில் பாராட்டு
x
தினத்தந்தி 12 April 2020 12:00 AM GMT (Updated: 11 April 2020 10:03 PM GMT)

தனக்காக மருந்து வாங்க சென்று போலீசிடம் சிக்கிய கணவரை மீட்க கொளுத்தும் வெயிலில் நடந்தே வந்த கர்ப்பிணியை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

மதுரை,

மதுரையில் வாகன போக்குவரத்தை குறைக்கவும், தேவையில்லாமல் மோட்டார் சைக்கிளில் சுற்றிதிரிபவர்களை தடுக்கவும் நகரில் உள்ள அனைத்து பாலங்களையும் போலீசார் மூடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் வைகை ஆற்றின் வடக்கே இருந்து தெற்கு பகுதிக்கு செல்லும் அனைத்து பாலங்களும் மூடப்பட்டு, கோரிப்பாளையம் ஏ.வி.மேம்பாலம் மட்டும் அத்தியாவசிய தேவைக்கு செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. அதன் வழியாகவும் வாகனங்கள் அதிகமாக சென்றால் அவ்வழியாக செல்பவர்களை நிறுத்தி விசாரித்து அனுப்புமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் ஏ.வி.மேம்பாலம் பகுதியில் காலை 9 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை வாகனங்களை போலீசார் நிறுத்தி விசாரித்த பின்னரே அனுப்புகின்றனர். இந்த நிலையில் கோரிப்பாளையம் அருகே உள்ள ஆழ்வார்புரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர், தனது கர்ப்பிணி மனைவிக்கு மருந்து வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தார்.

கோரிப்பாளையம் ஏ.வி.பாலம் அருகே வந்த போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர் தனது மனைவிக்காக மருந்து வாங்க செல்வதாக கூறியும் போலீசார் கேட்காமல் அவரது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதை அவர் போன் மூலம் வீட்டில் இருக்கும் தன்னுடைய மனைவிக்கு தெரிவித்துள்ளார்.

உடனே தனது கணவரை போலீசாரிடம் இருந்து மீட்பதற்காக அந்த கர்ப்பிணி வெயிலில் நடந்தே வந்தார். பின்னர் அவர் நடந்த சம்பவம் குறித்து அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் தெரிவித்தார். ஆனால் அவர் மோட்டார் சைக்கிளை திரும்ப தரமுடியாது என்று கூறி கடுமையான வார்த்தைகளால் பேசி அங்கிருந்த விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவருத்தம் அடைந்த அந்த பெண், தனது கணவரை அழைத்து கொண்டு வீட்டிற்கு மீண்டும் நடந்தே சென்றார்.

இந்த சம்பவம் குறித்து அங்கிருந்த சிலர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் உடனடியாக விசாரணை நடத்தினர். பின்னர் நடவடிக்கை எடுத்து, கர்ப்பிணியின் கணவரிடம் மோட்டார் சைக்கிளை திரும்பவும் ஒப்படைத்தனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் போலீசாரின் உன்னத பணிகளை பொதுமக்கள் பாராட்டுகிறார்கள். இந்த நிலையில் அவசர தேவைக்கு மருந்து வாங்க செல்கிறவர்களிடம் போலீசார் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது. அதே போன்று தனக்காக மருந்து வாங்க சென்ற கணவர் போலீசாரிடம் சிக்கியதை அறிந்து, அவரை மீட்க நடந்தே சென்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்த கர்ப்பிணியின் செயலையும் பாராட்டி மதுரையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

Next Story