ஈரோட்டில் தடையை மீறி இறைச்சி-மீன் கடை நடத்திய 3 பேர் கைது
ஈரோட்டில் தடையை மீறி இறைச்சி மற்றும் மீன் கடை நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாநகர் பகுதியில் 250-க்கும் மேற்பட்ட கோழி, ஆட்டு இறைச்சி கடைகள் உள்ளன. மேலும் ஸ்டோனி பாலம், கருங்கல்பாளையம், பி.பி.அக்ரஹாரம் உள்பட 6 இடங்களில் 100-க்கும் மேற்பட்ட மீன் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டு உள்ள நிலையில், மீன் மற்றும் இறைச்சி கடைகளில் முறையாக சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை.
இதனால் வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த 2 நாட்களிலும் கடை திறக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டது. கடந்த வாரம் முதல் நடைமுறைக்கு வந்த இந்த தடை, 144 தடை உத்தரவு முடியும் வரை அமலில் இருக்கும் என மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் மற்றும் இறைச்சி கடைகளை திறக்க அனுமதி இல்லை. அதனால் மாநகர் பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. எனினும் தடையை மீறி ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் மீன் மற்றும் கோழி -இறைச்சி கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீன் மற்றும் இறைச்சி கடைக்காரர்களை எச்சரித்து கடைகளை மூட உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்தும் கிருஷ்ணம்பாளையம் ஓங்காளியம்மன் கோவில் வீதியில் ஆட்டு இறைச்சி கடை நடத்திய நாடார் மேடு பகுதியை சேர்ந்த சம்சுதீன் (வயது 37), கமலா நகர் பகுதியில் மீன் கடை நடத்திய அதே பகுதியை சேர்ந்த அப்துல் லத்தீப் (20), வண்டியூரான் கோவில் வீதியில் கோழி இறைச்சி கடை நடத்திய அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஸ் (44) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 30 கிலோ மீன் மற்றும் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.5
இதேபோல் கொடுமுடியில் பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள ஒரு மளிகை கடையில் அரசு நிர்ணயித்த நேரத்தை தாண்டி பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பேரூராட்சி நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் பேரூராட்சி செயல் அதிகாரி விஜயநாத் மற்றும் அதிகாரிகள் சம்பவ கடைக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அரசு நிர்ணயித்த நேரத்தையும் தாண்டி மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து அந்த மளிகை கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
இதேபோல் கொடுமுடி பைபாஸ் ரோட்டில் அரசின் உத்தரவை மீறி கடையை திறந்து இறைச்சி விற்பனை செய்த கடையையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
Related Tags :
Next Story