திருப்பூரில் இறைச்சி, மீன் கடைகளில் கூட்டம் குறைவு - ரோட்டோர காய்கறி கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு
திருப்பூரில் இறைச்சி, மீன் கடைகளில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. ரோட்டோர காய்கறி கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
திருப்பூர்,
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையன்று இறைச்சி, மீன் கடைகளில் கூட்டம் கூடுதை தடுக்கும் வகையில் முன்கூட்டியே இறைச்சி, மீன்களை 250 கிராம், 500 கிராம், 1 கிலோ எடைகளில் டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்ய அறிவுறுத்தியிருந்தது. அதுபோல் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டிலும் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை வியாபாரிகளுக்கு மட்டுமே மீன் விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டு இருந்தது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாநகரில் இறைச்சி, மீன் கடைகளுக்கு முன்பு வழக்கத்தை விட கூட்டம் குறைவாக இருந்தது. ஒவ்வொரு பகுதியிலும் மாநகராட்சியின் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு கடைகளுக்கு முன்பு கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டனர். சி.டி.எஸ். பஸ் நிறுத்தம், காங்கேயம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள மீன் கடைகளில் கூட்டம் குறைவாக இருந்தது. கடைக்காரர்கள் முககவசம்அணியாமலும், கையுறை அணியாமலும் மீன் விற்பனை செய்ததை அங்கிருந்த தன்னார்வலர்கள் தட்டிக்கேட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபோல் மாநகரில் முக்கிய பகுதிகளில் ரோட்டோரம் காய்கறி கடைகளை அமைத்து தினமும் விற்பனைசெய்து வந்தனர்.நேற்று காலை 11 மணி வரை மட்டுமே ரோட்டோர காய்கறி கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அங்கிருந்த தன்னார்வலர்கள் மற்றும் போலீசார் 11 மணிக்கு மேல் காய்கறி கடைகளை நடத்த அனுமதிக்கவில்லை. பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வெளியில்செல்வதை தவிர்த்து முடிந்தவரை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சமையல்செய்து சாப்பிட்டு பாருங்கள் என்றும், அவ்வாறு நீங்கள் தயாரித்த உணவை டுவிட்டரில் பதிவிடலாம் என்றும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். நேற்று காலை இட்லி, முட்டை, ஆரஞ்சு பழம் தான் எனது காலை உணவு என்று கலெக்டர் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தார். இதுபோல் மாநகர மக்கள் பலரும் தங்கள் வீட்டில் எளிமையாக தயாரிக்கப்பட்ட உணவுகளின் புகைப்படத்தை கலெக்டரின் டுவிட்டர் மற்றும் முகநுல் பக்கத்துக்கு அனுப்பி இருந்தனர்.
Related Tags :
Next Story